பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பான சார்க் அமைப்பில் இலங்கையை முக்கிய நாடாக தான் கருதுவதாக சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர், அம்ஜாட் ஹுசைன் பீ. சியால் தெரிவித்துள்ளார். 

நேபாளத்திற்கு அரசமுறை பயணத்தினை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இச் சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சார்க் அமைப்பின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை அதன் செயளாலர் பாராட்டியதுடன், அது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பையும் பிணைப்பையும் மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவினால் வலியுறுத்தப்பட்டதோடு, 

சார்க் அமைப்பு தொடர்பாக தாம் வைத்திருக்கும் உயர்ந்த மதிப்பின் காரணமாக இந்நிகழ்வில் பங்குபற்றியதாகவும் சார்க் அமைப்பின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் சார்க் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஷேட விருந்தினர் புத்தகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுக் குறிப்பினை பதிவு செய்ததுடன், ஜனாதிபதியின் வருகையை நினைவு கூறும் வகையில் அவ்வளாகத்தில் மரக் கன்றொன்று நாட்டப்பட்டது.