(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் 72 ஆவது சம்மேளனம் எதிர்வரும் 6 ஆம் திகதி கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த சம்மேளனத்தின்போது கட்சியின் உள்ளக அமைப்பின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இணக்கத்திற்கு வந்த விடயதானங்கள் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை கட்சி செல்ல வேண்டிய வழிமுறை தொடர்பான அடிப்படை திட்டங்களும் சம்மேளனத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் அரசியல் ரீதியான பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன. இந்த சம்மேளனத்திற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் என பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.