(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் பெறுபேறுகள் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை போராட்டங்களால் தம்மை வீழ்த்த முடியாது என்று குறிப்பிடும் அரசாங்கத்திற்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் எவ்வளவு மக்கள் தற்போது அணிதிரண்டுள்ளனர் என்று  அரசாங்கத்திற்கு காட்டுவதே இப் போராட்டத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த போராட்டத்தில் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதியினை நம்பி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி நடுத்தர மக்களும், துறைசார் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பந்துலகுணவர்த்தன எம்.பி.,

போராட்டம் அமைதியான முறையிலேயே இடம்பெறும். மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த தரப்பினரால் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது.

இருப்பினும் அரசாங்கம் குறித்த போராட்டத்தை சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டால் அரசாங்கம் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.