கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்களை துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

600 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட 'கண்ணியமாக வலுவூட்டல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திகான எம்.ஜே.எப்' நிலையத்தினை பிரதம ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறிய பிரதமர்,

கிழக்கு மாகாணத்தின்  அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாயத்தினை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார். 

அத்துடன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா மற்றும் பலாலிக்கும் உள்ளூர் விமான சேவை நடத்துவது தொடர்பாக இரண்டு உள்ளூர் சிவில் விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.  இந்த திட்டங்கள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். 

இதன்மூலம் மட்டக்களப்பு கல்முனை அம்பாறை போன்ற பகுதிகளில் அதிக இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு தொழில் வாய்பின்றி உள்ளனர். இவ்விளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதே சுற்றுலாத்துறை மேம்பாட்டின் நோக்கம் என்றார்.