முயன்றால் முடியும் என்னும் எண்ணத்துடன் மூன்று சக்கர வண்டியில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணம்

முயன்றால் முடியும் என்ற மனோநிலையுடன் நேற்றைய தினம் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி மூன்று சக்கர வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார் மொஹமட் அலி.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வவுனியா – சூடுவெந்தபுலவை சேர்ந்த 31 வயதான மொஹமட் அலி வவுனியாவிலிருந்து கொழும்பிற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களும் சளைத்தவர்களல்ல என்பதை எடுத்து கூறும் வகையிலேயே அவர் இந்த மூன்று சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மொஹமட் அலி வட மாகாண பரா ஒலிம்பிக்கில் மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

மின்சார சபையில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 2015 ஆம் ஆண்டு மின்கம்பத்திலிருந்து வீழ்ந்தமையால் இவரின் முள்ளந்தண்டு பாதிப்பிற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.