(நா.தனுஜா)

கொழும்பு சட்டக்கல்லூரியின் மாணவ சங்க தலைமைத்துவத்துக்கான தேர்தல் இரு மாணவர் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற தேர்தலில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலும் மேலும் தெரியவருவதாவது, 

சட்டக்கல்லூரியின் மாணவர் அமைப்புக்களான சட்ட மாணவர் சங்கம் மற்றும் சிங்கள சட்ட மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளில் இலக்கமிடப்படாமையினால் வாக்குப் பதிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே மீண்டும் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறித்தவொரு மாணவர் அமைப்பு சட்டக்கல்லூரியின் அதிபரிடம் வலியறுத்தியுள்ளது.

எனினும் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு மறுத்த அதிபர், மோசடி வாக்குகளை மாத்திரம் சீரமைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த மாணவர் அமைப்பு, அதிபர் சட்டக்கல்லூரியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் முறையான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆகையினாலேயே சட்டக்கல்லூரி வளாகத்தில்  பதற்ற நிலை தோன்றியுள்ளது.