(எம்.சி.நஜிமுதீன்)

வீர துட்டுகெமுனு அமைப்பினூடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா அதற்கு முன்னர் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமிடத்து தமது அமைப்பின் முதலமைச்சர் வேட்டபாளராகக் கழமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தான் சிக்கல் உள்ள கட்சிகளில் இணைந்துகொள்ளப் போவதில்லை என கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் பேரணி நடத்துகின்ற போதும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஏனெனில்  குறிப்பிட்ட கால எல்லை முடியும் வரையில் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாத வகையில் அரசியலமைப்பில் ஏற்பாடுள்ளது. எனினும் நாட்டின் பாரம்பரியங்களிலும், கலாசாரத்திலும், பெளத்த தர்மத்திலும், சிங்கள கட்டமைப்பிலும் அரசாங்கம் கை வைக்குமாக இருந்தால் அப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டிவரும்.

மேலும் கூட்டு எதிர்கட்சியில் நாட்டை நேசிக்கும் நல்லபிப்பிராயம் கொண்டவர்களும் உள்ளனர். அதேவேளை ராஜபக்ஷவினரை எவ்வாறாவது ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களும் அங்கம் வகிக்கின்றனர். எனவே ராஜபக்ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பில்  எவரும் தமது பணத்தை செலவிட்டு கொழும்புக்கு வந்து பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். 

இதேவேளை வட மாகாணத்திற்குத்  தேவையான விடயங்களை மேற்கொள்வதற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோரியவற்றை செய்வதற்கும் எவரும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது. பிரபாகரனின் தேவையை நிறைவேற்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஆகவே நாட்டைப் பிரிப்பதற்கு இடமளிக்க மாட்டோம்." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.