இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளுக்கு போஷாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு இன்று யாழில் நடைபெற்றது.

வட.மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் செயலமர்வினை வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம அதிகாரி பவூலா புலென்சியா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

இச்செயலமர்வில், இலங்கை மற்றும் உலக நாடுகளில் பல கோடி குழந்தைகளிற்கு உச்ச மூளை விருத்திக்கான பல்வேறு தூண்டல்கள் கிடைப்பதில்லை.

அதனால், போஷாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என்றும், வன்முறை, தீவிர மன அழுத்தம், சூழல் மாசடைதல், முரண்பாடுகளிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதில்லை. இதனால், பிள்ளையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொருத்தமான தூண்டல்களை வழங்கக்கூடிய கருத்துடன் பராமரிக்கும் பெரியவர்களினால் குழந்தைகள் கவனிக்கப்படுவதில்லை எனவும் யுனிசெப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகள், துஷ்பிரயோகம், கைவிடுதல் போன்றவற்றிற்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு பல நாடுகளில் பல செயற்திட்டங்களை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வரும் ஒரு பகுதியாக இந்த செயலமர்வினை இலங்கையில் வட.மாகாணத்தில் முதன் முதலாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.