(எம்.எம்.மின்ஹாஜ்)

சேருவில ரஜமகா விகாரையின் வளர்ச்சிக்கு பெளத்தர்கள் மாத்திரமின்றி தமிழ், முஸ்லிம் மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமையானது இந்த பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சேருவில ரஜமகா விகாரையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக அந்த விகாரைக்கு கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பிரதமர் பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்ட பின்னர் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர்,

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தமையை கருத்திற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தன இந்த சேருவில பகுதியை புனித நகரமாக மாற்றினார்.

அத்துடன் இந்த விகாரையின் வளர்ச்சிக்கு பல்வேறு அமைச்சர்கள் ஒத்துழைப்புகள் வழங்கியதுடன் காமினி திஸாநாயக்க இந்த விகாரையின் நடவடிக்கைகளை பொறுப்பேற்றார். மேலும்முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பிரதமராக இருந்த போது குறித்த நகரத்தின் திட்டமிடல் பணிகளை முன்னெடுத்தார். 

எனினும் 1994 ஆம் ஆண்டு விகாரை வளர்ச்சிக்கான பணிகள் தடைப்பட்டன. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இந்த விகாரையின் பணிகள் உரிய முறையில் இடம்பெறவில்லை. இதனால் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் நுழைவாயில் பாதைக்கான அபிவிருத்திகளை பொறுப்பேற்று தற்போது முன்னெடுத்து வருகின்றார் என்றார்.