கம்போடியாவில் வேவுநடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலிய திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் ரிக்கெட்சனிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆறு வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

கம்போடியாவில் 1995 முதல் பத்திரிகையாளராகவும் வீடியோ ஆவணப்படுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்த ரிக்கெட்சன் 2017 இல் அரசியல் பேரணி மீது டிரோன் விமானத்தை பறக்கவிட்டதற்காக கைதுசெய்யப்ட்டார்

அதன் பின்னர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிற்கு கம்போடிய நீதிமன்றம் ஆறு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

ரிக்கெட்சன் தனது பத்திரிகை துறையை வேவு நடவடிக்கைளிற்காக பயன்படுத்தினார் என கம்போடிய அரச சட்டத்தரணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரிக்கெட்சனிற்கு முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் மற்றும்  கம்போடிய தேசிய மீட்பு கட்சியுடன் தொடர்புள்ளது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் அவர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முயற்சிகளில் ஈடுபட்டார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேவேளை தீர்ப்பின் பின்னர் அழைத்துச்செல்லப்படும் வேளை கருத்து தெரிவித்துள்ள அவர் யாரிற்காக நான் வேவு பார்த்தேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.