வவுனியாவில் வரட்சி காரணமாக ஒன்பதாயிரத்து 516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து 516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். 

வரட்சி காரணமாக பலர் மேட்டு நில பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பயிர்செய்கை மேற்கொண்ட சிலரின் பயிர்களும் அழிவடைந்துள்ளது. இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் நான்காயிரத்து 437 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 351 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் ஆயிரத்து 323 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் இரண்டாயிரத்து 405 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களுக்கான வரட்சி நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.