மொராக்கோ நாட்டின் பெனி மெல்லால் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி கடத்தப்பட்டு 2 மாத காலமாக தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதோடு இன்னும்  தான் அனுபவித்த பல கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த சிறுமி 2 மாதங்களுக்கு முன்னர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் மர்ம நபர்களால் கத்தி முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

சிறுமியை கடத்திய மர்ம நபர்கள் போதை மருந்தினை சிறுமிக்கு கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர்

தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பாக குறித்த சிறுமி அளித்த வாக்குமூலத்தில்,

“என்னை கடத்திய மோசமான ஆண்கள் சில நாட்கள் எனக்கு போதை மருந்தினை கொடுத்து என்னை பாலியல் சித்திரவதை செய்தார்கள். 

சில நாட்களுக்கு பின்னர் என்னை பணத்திற்காக வேறு சிலரிடம் விற்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்கள் என என்னை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை செய்தனர்.

எனக்கு அங்கு அவர்கள் சரியாக உணவு கூட தருவதில்லை. மாறாக சிகரெட்டால் சூடு வைப்பார்கள் அவர்களிடமிருந்து தப்பித்து வந்த நான் எனது உடலில் சிகரெட் சூடு வைத்த தளும்புகளை மறைக்க  பச்சை குத்தி மறைத்துள்ளேன்” என அவரது உடலில் பச்சை குத்திய இடங்களை காண்பித்துள்ளார்.

மேலும் அச் சிறுமி “என் வாழ்க்கையை நான் தொலைத்து விட்டேன்” என கண்ணீர் மல்க பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு பல்லாயிர கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளதுடன் 75,000த்திற்கும் அதிகமானோர் குறித்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்தோடு சிறுமிக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கோரி மக்கள் இணைந்து கையெழுத்து வேட்டை நடாத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார்  தீவிர விசாரணைகளை நடாத்தி வருவதோடு குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.