(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் தனது முதல் போட்டியிலேயே வெற்றியீட்டியது சுதர்சனவின் தலைமையிலான இலங்கை றக்பி அணி. 

நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் 68-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபாரமான வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்தது.

இந்தப் போட்டியில் முதலாவது பாதி நிறைவடையும்போது இலங்கை அணி 28 - 0 என முன்னிலையில் இருந்தது. 

இரண்டாம் பாதி ஆரம்பித்தது மேலும் வேகத்தை அதிகரித்து ஆடிய இலங்கை அணி இரண்டாவது பாதியில் நிறைவில் 68 -0 என்ற புள்pளக்ள அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதேவேளை நேற்று மாலை நடைபெற்ற தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணி கொரிய அணியை எதிர்த்தாடியது. 

இந்தப் போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் கடும் போட்டிக்கு மத்தியிலேயே கொரிய அணி வெற்றிபெற்றது.

ஆரம்பம் முதலே சளைக்காமல் ஆடடிய இரு அணிகளும் வெற்றி வாய்ப்பை தம்பக்கம் வைத்துக்கொள்ளவே எத்தணித்தது. 

ஆனாலும் முதல் போட்டியில் ஆடிய களைப்பில் களமிறங்கியிருந்த இலங்கை அணி இறுதியில் 31 - 26 என்ற புள்ளிகளால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

4 x 400 ஓட்டத்திலும் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டு விழாவில் நேற்று நிறைவடைந்த மெய்வல்லுநர் போட்டிகளில் இறுதியாக நடைபெற்ற ஆண்களுக்கான 4x400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்றிருந்தது. 

ஆனாலும் அருண தர்ஷன, பசிந்து லக்ஷான், அஜித் மற்றும் கலிங்க குமார ஆகியோரால் இலங்கைக்கு பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விட்டது. 8 அணிகளில் இலங்கை அணியோ பந்தயத் தூரத்தை 3.02.74 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பிடித்தது. 

இதில் பஹ்ரைன் அணி 3.00.56 செக்கன்களில் ஓடி முடித்து தங்கத்தை வென்றது. வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவும் வெண்கலத்தை ஜப்பானும் வென்றது.

பெண்களுக்கான 4x400 ஓட்டப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பந்தயத் தூரத்தை 3.28.72 செக்கன்களில் நிறைவுசெய்தே இந்தியா தங்கத்தை வென்றது. இதில் வெள்ளிப் பதக்கத்தை பஹ்ரைனும் வெண்கலப்பதக்கத்தை வியட்நாமும் வென்றது, பெண்களுக்கான 4x400 மீற்றர் ஓட்டத்திற்கான இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெறவில்லை.

இஸாரா மதுரங்கி தகுதி

மேசைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கலந்துகொண்ட இலங்கை வீராங்கனை இஸாரா மதுரங்கி பாகிஸ்தான் வீராங்கனையை 4-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 32 வீராங்கனைகளுக்கான தகுதிநிலை சுற்றுக்கு முன்னேறினார். தனது இரண்டாவது போட்டியில் 5 ஆவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனையுடன் போட்டியிடவுள்ளார்.

ஜூடோ

இதேவேளை ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் இலங்கை வீரர்கள் இருவர் போட்டியிட்டிருந்தாலும் அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை. 81 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சாமர நுவன், கிர்கிஸ்தான் வீரரிடம் வீழ்ந்தார். 

வேறு விளையாட்டில் ஈடுபட்ட ஜப்பான் வீரர்கள் நால்வருக்கு தடை 

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க இந்தோனேஷியா வந்திருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஹோட்டலில் உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக 4 பேருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் கூடைப்பந்து வீரர்களான ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் ஜகர்தாவில் உள்ள இரவு களியாட்ட விடுதிக்குச் சென்று மது அருந்தியதுடன், பெண்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஹோட்டலுக்கு சென்றதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.