மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுவதாகத் தெரிவித்து நேற்று பட்டிப்பளை பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கால்நடை பண்ணையாளர்களால் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மாடுகள் கடத்தப்படுவதை நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் படுவான்கரை மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

யுத்ததிற்கு பின்னர் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகள் கடத்திச்செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் இதன்போது விசனம் வெளியிட்டனர்.

வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர், மேய்ச்சலில் உள்ள தமது மாடுகளை கடத்திச் செல்வது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றபோதிலும், இதுதொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர். 

அதேநேரம், மண்முனைப் பாலம் அமைக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறான மாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுத்து தமது கால் நடைகளை பாதுகாக்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு, இந்த ஆண்டில் இதுவரையில் 75 இக்கும் மேற்பட்ட சட்ட விரோத மாடு கடத்தல்கள் தமது பொலிஸ் நிலையத்தினால் பிடிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.