நாட்டின் சைக்கிளோட்டத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் இலங்கையின் நீண்டதூர சைக்கிளோட்ட பந்தயமான SLT Speed Up சைக்கிள் சவாரி மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஆண்களுக்கான பந்தயம் செப்டெம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8 ஆம் திகதி முடிவடையவுள்ளது. பெண்களுக்கான போட்டி செப்டெம்பர் 7, 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளளது. 

அத்துடன் இலங்கை சைக்கிள் பந்தய வரலாற்றை மாற்றும் வகையில், முதல் முறையாக விசேட தேவை உடையோருக்கான பாரா சைக்கிள் பந்தய நிகழ்வும் செப்டெம்பர் 8 ஆம் திகதி இடம்பெறும். 

820 கிலோமீற்றர் தூரம் கொண்ட ஆடவர் மற்றும் 175 கிலோமீற்றர் தூரம் கொண்ட பெண்கள் ஆகிய இரண்டு பிரிவு போட்டிகளும் கொழும்பில் இருந்து ஆரம்பமாகி குளியாபிட்டியவில் முடியும். 75 கிலோமீற்றர்கள் கொண்ட பாரா போட்டி குருநாகலில் ஆரம்பித்து குளியாபிடியில் முடியவுள்ளது.

இந்த போட்டிகளை இலங்கையின் தொலைத்தொடர்பு வழங்குனரான சிறிலங்கா டெலிகொம் (SLT), இலங்கை சிக்கிள் சம்மேளனத்துடன் (CFSL) இணைந்து நடத்துகின்றது.

மேலும் சிறிலங்கா டெலிகொம், சைக்கிளோட்ட வீரர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தானியங்கி கண்காணிப்பு அமைப்பு, முடிவுகளை கணிக்க மின்னணு நேர அமைப்பு உட்பட புதிய அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை இந்த போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.