தந்தையார் கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் மரபைப் பேணிக்காப்பதென்ற உறுதிமொழியுடன் மகன் மு.க. ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய  தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் கழகத்தின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது உண்மையில் ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வு மாத்திரமே. தந்தையார் 50 வருடங்களாக வகித்த தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் வருவார் என்பது ஒன்றும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்லவே.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு மூன்று வாரங்கள் கடந்து தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கு கழகத்திற்குள் இருந்து எந்தப் பெரிய சவாலும் வரப்போவதில்லை. ஆனால், அவரது குடும்பத்திற்குள் இருந்து அதுவும் மூத்த சகோதரர் மு.க. அழகிரியிடமிருந்துதான் பிரச்சினை தோன்றும் அறிகுறிகள் தாராளமாகத் தென்படுகின்றன. அவர் அடுத்தவாரம் சென்னை அண்ணா சாலையில் இருந்து மரீனா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் வரை அமைதி ஊர்வலமொன்றை நடத்தப்போவதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறு தமிழகம் பூராவுமிருக்கும் தனது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவேண்டுமென்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். தந்தையார் உயிருடன் இருந்தபோதே 2014 லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரிக்கு கழகத்திற்குள் குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லை என்பதால் அவரால் ஸ்டாலினுக்கு எந்தளவு நெருக்கடியைக் கொடுக்கக்கூடியதாயிருக்கும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் தி.மு.க.வை தொடர்ச்சியாக பெருவெற்றி பெறவைக்க ஸ்டாலினால் இயலுமாக இருந்தால் அவரின் தலைமைத்துவத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் வரப்போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயமானதாகும்.

தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து கழகத்தின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் உரைநிகழ்த்திய ஸ்டாலின் தன்னை அரசியல் ரீதியில் புதிதாகப் பிறந்த ஒருவனாக நோக்குமாறு வேண்டுகோள் விடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவரது உரையில் மிகவும் முக்கியமானதாக அவதானிக்கக்கூடியதாக இருந்த அம்சம் என்னவென்றால் பாராளுமன்றத்தின் லோக்சபாவுக்கு தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வருடத்துக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் அவர் வருங்காலத்தில் கடைப்பிடிக்கப்போகும் அரசியல் பாதையைத் தெளிவாக வரையறுத்துக் கூறியதுதான். அதாவது கழகத்தின் பாரம்பரியக் கொள்கை, கோட்பாடுகளில் ஒன்றான மதசார்பின்மையைக்  கடைப்பிடிக்கப் போவதையும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை உறுதியாக எதிர்த்துநிற்கப் போதையும் உறுதியான வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

இந்தியா எங்கும் இந்துத்வா தீவிரமடைந்துவரும் ஒரு நேரத்தில் எதேச்சாதிகாரத்துக்கும் இன, மத வாதத்துக்கும் எதிராக ஸ்டாலின் தெளிவாகப்பேசியமை முற்போக்கான அரசியல் சக்திகளினால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிரான சக்திமிகு மாணவர் இயக்கத்தின் துணிச்சலான போராட்ட அலையில் தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய தி.மு.க. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்று வரும்போது அதுவும் குறிப்பாக லோக் சபா பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, அதன் வரலாற்றில் ஒரு ஆசனமும் கூட இல்லாத நிலையில் இன்று பெரும் பின்னடைவுடன் காணப்படுகிறது.

ஆனால் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலுமாக மொத்தம் 40 தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றைக் கைப்பற்றி மீண்டும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கக்கூடிய நிலைக்கு ஸ்டாலின் கழகத்தைக் கொண்டுவந்தால், கழகத்தின் தாபகர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பையேற்ற தந்தையார் கலைஞர் 1971 பொதுத்தேர்தலில் நிகழ்த்திக்காட்டிய சாதனையுடன் ஒப்பிட்டுப் பேசப்படும் என்பது நிச்சயம்.

மிகவும் சாதுரியமான அரசியல் மதியூகியான கலைஞர் கருணாநிதி, பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் தனது கழகத்தை அணிசேர்த்து தேசிய ரீதியில் முக்கியமான பாத்திரத்தை வகித்தவர்.ஆனால் அவரது மகனோ பாரதிய ஜனதாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் நாளே பிரகடனம் செய்திருக்கிறார். மதவாதச் சக்திகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலமாக ஸ்டாலின் தமிழகத்தின் ஏனைய அரசியல் சக்திகளையும் விட தார்மீக ரீதியில் தன்னை உயர்வான நிலைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்.

கழகத்தின் உயர்மட்டம் கலைஞர் கருணாநிதியின் பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களைத் தாராளமாக உள்ளடக்கியதாக இருக்கின்ற போதிலும் கழகம் தொண்டர்களின் பலத்தை அடிப்படையாகக் கொண்டது. அண்ணா தி.மு.க.வின் தலைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஸ்டாலின் நிச்சயமாக பாரதூரமான சவால்களுக்கு மத்தியிலேயே கழகத்தை வழிநடத்திச் செல்லவேண்டியிருந்திருக்கும். இப்போது ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் களத்தில் அதுவும் அண்ணா தி.மு.க. பல அணிகளாக சிதறுண்டு கிடக்கும் நிலையில் ஸ்டாலினுக்கு பெருமளவுக்கு வாய்ப்பான அரசியல் சூழ்நிலையே காணப்படுகிறது.அதை அவர் ஊவ்வாறு சாதுரியமாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை வரும் நாட்களில் பார்க்கப்போகிறோம்.

(வீரகேசரி இணையத்தள வெளியுலக ஆய்வுத்தளம் )