(ப.பன்னீர்செல்வம்)

வடக்கு கிழக்கில் இயற்கை அழிவுகளை  எனது  கண்களில்  கண்டேன். எனவே அம்மாகாணங்களை நாம் மீளக்கட்டியெழுப்ப வேண்டும்.  அது எமது கடப்பாடாகும் எனத்  தெரிவித்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 

சூழல் பாதுகாப்பு சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர்  தெரிவித்தார். 

கொழும்பு  பண்டாரநாயக்க  சர்வதேச  மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற நச்சுத் தன்மையற்ற விடயம்.  தார்மீக  நாடு என்ற தொனிப்பொருளுடனான கண்காட்சியின்  இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்  இவ்வாறு தெரிவித்தார். 

பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு  கிழக்கிற்கு விமானங்களில்  நான் பயணிக்கும் போது விமானத்திலிருந்து கீழே பார்க்கும் போது அப்பிரதேசங்களின் இயற்கை அழிவுகளை  எனது கண்களால்  கண்டேன். 

இதனை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதில்தான் நாம் இன்று முக்கிய கவனம்  செலுத்த வேண்டும். 

சுதந்திரத்திற்கு  பின்னர் நாட்டு மக்களுக்கு  சுகாதார சேவைகளை  வழங்கினோம்.  வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.  கல்விச் சேவைகளை வழங்குகிறோம். அடிப்படை  வசதிகளை வழங்கினோம். 

இவ்வாறான  நடவடிக்கைகளின்  போது சில வேளைகளில் சூழல் பாதுகாக்கப்பட்டது.  சில வேளைகளில் சூழல்  பாதிக்கப்பட்டது. 

எனவே மறைந்த ஜனாதிபதி பிரேமதாச காலத்தில்  சூழல் பாதுகாப்பு  சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால்  அது நிலையான சட்டமாகவில்லை. 

தற்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில் தேசிய அரசு  ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய அரசு சூழல்  பாதுகாப்பு தொடர்பில் சட்டங்களை  தயாரித்து  அதற்கு  அமைச்சரவை அங்கீகாரத்தை  பெற்றுக்கொண்டுள்ளதோடு,  தற்போது  அது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில்  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும். 

உலகில்  இன்று பல்வேறு  நாடுகள் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கான திட்டங்களை  முன்னெடுக்கின்றது. எனவே நாமும் இத்திட்டத்தை வெற்றிகரமாக  முன்னெடுப்பதோடு, தேசிய ரீதியில் தன்னிறைவைக் காண்பதற்கு சர்வதேச சந்தைக்கும் எமது பொருட்களை அனுப்பி வைக்க  வேண்டும். 

இந்து சமுத்திரத்தில் நச்சுத் தன்மையற்ற உணவு  உற்பத்தியின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டும். 

வீழ்ச்சியுற்றிருக்கும் எமது கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பு வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.