உலகின் மின்னல் வீரர் என அழைக்கப்படும் ஜமேய்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் கலந்துகொள்ளும் முதலாவது தொழில்சார் கால்பந்தாட்டப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கைள சுவீகரித்துள்ள உசைன் போல்ட் கடந்த வருடம் சர்வதேச  அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். 

அதன் பின்னர் கால்பந்தாட்ட விளையாட்டில் ஏற்பட்ட மோகம் காரணமாக தென்னாபிரிக்காவில் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டு தன்னை கால்பந்தாட்ட வீரராக மாற்றிக் கொண்டார்.

அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அவர், அங்கு  சென்ட்ரல் கோஷ்ட் மெரினர்ஸ் (central coast mariners) அணியுடன் இணைந்து கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் நாளை ஆரம்பமாகவுள்ள 'ஏ' தரத்திலான கால்பந்தாட்ட தொடரில் உசைன் போல்ட் சென்ட்ரல் கோஷ்ட் மெரினர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சென்ட்ரல் கோஷ்ட் மெரினர்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளர், 10 அணிகள் பங்கு பற்றும் இந்த கால்பந்தாட்டத் தொடரில் உசைன் போல்ட் தனது திறமையை வெளிப்படுத்துவார் என நம்பிக்கையுள்ளது எனத் தெரிவித்தார்.