அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையின் "சேர்மன்" என்றழைக்கப்பட்ட ‘ஹை என்டியூரன்ஸ் கட்டர்’  கப்பல் வைப ரீதியாக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹவாய் - ஹொனொலுவில் கடந்த 27ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வின் போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க உத்தியோகபூர்வமாக சேர்மனை கையேற்று குறித்த கப்பலுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டளை அதிகாரி கப்டன் அருண தென்னகோனிடம் கையளித்துள்ளார்.

சேர்மன் கப்பலானது இலங்கை கடற்படையில் உள்ள மிகப்பெரிய கப்பலாக அமையவிருப்பதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.

இந்தக் கப்பலானது இலங்கை தமது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளுக்கான ஆற்றலை அதிகரிக்கும் என்பதுடன், இந்து சமுத்திரத்தின் கப்பல் பயணப் பாதைகள் ஊடாக பயணிக்கும் ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.

115 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் 167 பேர் கொண்ட பணிக்குழு தாங்கிச் செல்லக்கூடியது.

ஒரு மாதத்துக்கு மேலாக 110 இலங்கை கடற்படையினர் ‘ஷேர்மன்’ கப்பல் குழுவினருடன் இணைந்து இந்த கப்பலை செயற்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.

சேர்மனை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அது வரையில் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் அதேபோல், கப்பல் குழுவினருக்கான பயிற்சிகள் என்பன அதுவரை தொடரவுள்ளன.

இந் நிகழ்வில் ஹவாயில் உள்ள இலங்கை தூதுவர் திரு.பெடெ குரே, அமெரிக்காவுக்கான பசுபிக் கடற்படை கடல் சார் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர், ரெட்ம் மார்க் எச் டெல்டன், சர்வதேச கையகப்படுத்துதலின் பிரதி பிரதம அதிகாரி திரு டொட் ரொய்னாட் மற்றும் ஹவாயில் உள்ள இலங்கை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.