(இரோஷா வேலு) 

கடவத்த அம்ஸ்டொன் சந்தியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவரை இன்று பேலியகொட பொலிஸார் கைது செய்து கடவத்த பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

மீவிட்டிய எல்லக்கல, மீரிகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரன்கொன் பெடிகே சஞ்சீவ சம்பத் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்ஸ்டொன் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது காயங்களுக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணித்திருந்தார். 

இச்சம்பவத்தின் போது 34 வயதுடைய கடவத்தயைச் சேர்ந்த அம்பேகம கமகே விமலா குமாரி என்பவரே  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் துப்பாக்கித்தாரியை தேடும் பணிகள் கடவத்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீவிட்டிய எல்லக்கல பகுதியிலுள்ள சந்தேகநபரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று கடவத்த பொலிஸில் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். 

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.