மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூத்தியார்குண்டு அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார்.

மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கமளித்தும் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

''இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டதற்கு அந்த அதிகாரி, "இதோ கரண்டு கம்பத்தில் ஏறி சாவு" என கூறியிருக்கிறார்.

இதைகேட்டு வெறுப்படைந்த ரவி பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி இறந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டர் ஆட்சியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி அங்கிருந்த மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.