இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதியில் காணப்படும் பாரிய புதைகுழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்களை  அடையாளம் காணும் நடவடிக்கையில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் வடமேற்கு நகரமான மன்னாரில் இதுவரை 100ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய மனித புதைகுழியிது.

26 வருடகால யுத்தத்தின் போது  ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் புதிய கட்டிடமொன்றிற்காக நிலத்தை அகழும் பணிகள் இடம்பெற்றவேளை மனிதஎலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் குறிப்பிட்ட பகுதியை முற்றாக அகழுமாறு உத்தரவிட்டது.

இந்த முழு பகுதியையும் இரண்டாக பிரிக்கலாம் ஒரு பகுதியில் ஒழுங்கான விதத்தில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன,மற்றைய பகுதியில்  ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை காணமுடிகின்றது என்கிறார் இப்பகுதியில் பணிகளை மேற்கொண்டுள்ள நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ.

இவர் களனி பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல்  தொல்பொருள் ஆய்வாளர்.

இன்னமும் அகழவேண்டிய பகுதிகள் உள்ளன இதன் காரணமாக மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது குழுவினர் மீட்ட மனித எச்சங்களில் ஆறு சிறுவர்கள் உடையவை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மன்னாரில் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டவர்கள் யார்? இவர்களை யார் எப்போது கொலை செய்தார்கள் என்பது மர்மமான விடயமாக காணப்படுகின்றது.

ஆதாரங்களை எவரும் சிதைப்பதை தடுக்கும் விதத்தில் உள்ளுர் காவல்துறையினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளித்துள்ள நிலையில் உள்ளுர் நிபுணர்கள் மண்டையோடுகளையும் எலும்புகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மனித எச்சங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய விதத்தில் ஆடைகளோ வேறு பொருட்களோ இதுவரை மனித புதைகுழியலிருந்து மீட்கப்படவில்லை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது மன்னார் நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அதேவேளை தமிழ் கிளர்ச்சிக்காரர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

புதைகுழிக்குள் உடல்கள் காணப்படும் விதம் குறித்து நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

உடல்கள் காணப்படும் விதம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் அது முற்றிலும் குழப்பமானதாக காணப்படுகின்றது இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்கின்றார் சோமதேவ.

மனித எச்சங்களை மீட்டதும்,அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் சேர்க்கின்றனர், அகழ்வுப்பணிகள் முற்றாக முடிவடைந்ததும்; அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

புதைகுழிக்குள் மீட்கப்பட்டவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பேராசிரியர் சோமதேவவும் அவரது குழுவினரும் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

இதுவரையில் எவர்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்குள் 94 மனித எச்சங்கள் காணப்பட்டன.

2014 இல் இவை மீட்கப்பட்ட போதிலும் இன்று வரை அவை குறித்த தெளிவான விபரங்கள் முடிவுகள் எவையும் வெளியாகவில்லை.

இலங்கை படையினரும் தமிழ்பிரிவினைவாதிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரசாங்கம் பொதுமக்கள் கொல்ல்ப்பட்டமை காணாமல்போனமைக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பில்லை என தெரிவித்து வருகின்றது.

இதேவேளை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் மன்னார் புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கான நிதியின் ஒரு பகுதியை வழங்குகின்றது.

மன்னார் புதைகுழி குறித்து முழுமையான விசாரணை அவசியம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்

காணாமல்போனோரை கண்டுபிடிக்க முயல்வதும்  அவர்கள் எந்த சூழலில் காணாமல்போனார்கள் என்பதை  உறவினர்களுக்கு தெரிவிப்பதுமே தங்கள் அலுவலகத்தின் முக்கிய பணி என்கின்றார் பீரிஸ்

காணாமல்போனோரை தேடும் பணிகளின் ஒரு பகுதியாக பாரிய மனித புதைகுழிகளை தேடும் நடவடிக்கை அமைகின்றது எனவும் தெரிவிக்கும் அவர்  மனித புதைகுழிகளுக்குள் காணாமல்போனவர்கள் உள்ளனரா என்பதை ஆராய்வதும் தங்கள் பணி என்கிறார்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக  இந்த புதைகுழி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளது.

மன்னாரில் மோதல்காலத்தில் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி செல்லமுயன்ற வேளை பல தமிழர்கள் காணாமல்போனார்கள் என்கிறார் மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர்  விக்டர் சூசை தெரிவிக்கின்றார்.

மோதல்களின் போது இந்தியாவிற்கு படகுகளில் தப்பி செல்ல முயன்ற பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல்போனார்கள் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

மன்னார் புதைகுழிகள் அகழப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த பகுதிக்கு சென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்கள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளை கூட கண்டுபிடித்துள்ளனர் என்பதை அறிகின்றோம்,இவர்கள் யார் எவ்வாறு இவர்கள் மரணத்தை தழுவினார்கள் என்பதை நாங்கள் கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை புதைகுழியில் காணப்படும் உடல்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை இராணுவம் நிராகரிக்கின்றது.

நிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் இடையில் எந்த தொடர்புமில்லை,இதுவரை எவரும் அந்த குற்றச்சாட்டுகளை சுமத்தவுமில்லை என்கின்றார் இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து

எனினும் இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு  நேர்மையான தீர்வை காண முயலவேண்டும் என தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்

நன்றி- பிபிசி

தமிழில் - வீரகேசரி இணையம்.