அவுஸ்திரேலியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சித்த இலங்கை தமிழர் ஒருவர் கிசிச்சை பலன் அளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சித்ததை தொடர்ந்து பிரிஸ்பேர்னின் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரின் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த நபர் மரணமடைந்துள்ளார்.

இலங்கை தமிழரின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார் இதன் பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலையின் பின்னர் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காததால் அவரது  செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரணித்துள்ள இலங்கை தமிழரின் மனைவியும் பிள்ளைகளும் இலங்கையில் வாழ்கின்றனர் அவர் 2012 இல் நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் 2014 இல் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அகதிகள்  உரிமை ஆர்வலர் இயன் ரின்டொல் தெரிவித்துள்ளார்.

புகலிடம் கோருபவர்களிற்கு எதிராக பின்பற்றப்படும் மிகக்கடுமையான கொள்கைகளிற்கு பலியாகியுள்ள இன்னொரு நபர் இலங்கை தமிழர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களிற்கு நீதி மறுக்கப்படுகின்றது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.