தி.மு.க கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா,பா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் தமிழ் பணியை எந்த விதத்திலும் மகிமை குறையாமல் இந்த அரசு பாதுகாக்கும். அவருடைய நூல்கள் அரசுடைமை ஆக்குவது குறித்து தி.மு.க கோரிக்கை வைத்தால் அதைப் பற்றி அரசு நிச்சயம் பரிசீலிக்கும். 

குறிப்பாக அவருடைய படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அ.தி.மு.க அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது.’ என்றார்.

முன்னதாக தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி பல திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியதுடன் பல நூல்களையும், சங்க இலக்கியங்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் கருணாநிதி எழுதிய நூல்களை அரசுடைமையாக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.