(லியோ நிரோஷ தர்ஷன்)

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நிகழ்த்தப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்றை சீனா முன்னெடுத்துள்ளது.

சீனாவின் பொருளாதார ஆதிக்க போக்கு பூகோள அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையின் தென் பிராந்திய கடலை மையப்படுத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் செயற்பாடுகள் குறித்த சந்தேகங்களை உலக நாடுகள் வெளிப்படுத்திய வண்ணமே உள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பயன்படுத்துவதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இலங்கையின் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் சிலரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன தூதரகம் கண்காணிப்பு விஜயத்திற்காக அழைத்து சென்றது.

கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை சீனா தனது இராணுவ தளமாகவோ அல்லது வேறு ராஜதந்திர நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படவில்லை என சீன குறிப்பிட்டுள்ளது.

மேலும் தென்கடலை கண்காணிப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக கட்டடத்தில் 12 ஆவது மாடியில் சிறப்பு கண்காணிப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கடற்படை முழுமையாக பாதுகாப்பு நடவடிக்கைளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுப்பதாக கூறினாலும் அங்கு கடற்படைக்கு அப்பால் மூன்று பாதுகாப்பு கட்டமைப்புக்களும் , சீ சீ ரிவி கண்காணிப்பு கட்டமைப்புக்களும் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டுவதாக பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க விளக்கமளித்தார்.

இத் துறைமுகத்தை அமைப்பதன் மூலம் இலங்கைக்கு கடற்துறை போக்குவரத்து மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை அதிகரிக்கப்படுவதோடு இதன் காரணமாக பொருளாதாரத்தில் பாரிய அபிவிருத்தி ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதே வேளை வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இதன் மூலம் பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.