அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான முயற்சியின் போது குயின்ஸ்லாந்தின் முதலைகள் நிறைந்த சதுப்பு நில பகுதியில் சிக்கிய சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலைகள் நிறைந்த பகுதியில் சிக்கிய படகில் வியட்நாமை சேர்ந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படகின் தலைமை மாலுமி மற்றும் அவரின் சகாவை காவல்துறையினர் அழைத்துச்செல்வதை பார்த்ததாக ஏபிசியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதிர்ப்பு எதுவுமின்றி காவல்துறையினரின் வாகனத்திற்குள் சென்றனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

படகு கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

படகை கண்டுபிடித்ததை தொடர்ந்து தேடும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை படகுகள் மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள்  அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முடிந்தமை கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு ஏற்பட்ட தோல்வி என உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

1400 நாட்களில் முதல்தடவையாக அவுஸ்திரேலியாவிற்குள் படகுமூலம் குடியேற்றவாசிகள் நுழைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன படகை அருகில் வருவதற்கு அனுமதித்ததை அல்லது அதனை கண்டுபிடிக்க முடியாமல் போனமை இதனையே புலப்படுத்துகின்றது என டட்டன் தெரிவித்துள்ளார்.

இது ஆள்கடத்தல்காரர்கள் இன்னமும் செயற்படுகின்றனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள நிச்சயமாக நாடு கடத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்