இலங்கையில் இடம்பெறும்  இலங்கையின்  இருபதுக்கு -20லீக் போட்டிகளின் போது சந்தேகத்திற்கிடமான விதத்தில் சில வெளிநாட்டவர்கள் செயற்பட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான விதத்தில் சில தனிநபர்கள் செயற்படுவது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு  தகவல் வழங்கியதை தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் இருந்து சில வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஆட்டநிர்ணய சதி முயற்சிக்காக வீரர்கள் எவரையும் எவரும் அணுகியதாக முறைப்பாடுகள் கிடைக்காத போதிலும் மைதானத்திலும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் ஊழல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் எவராவது அணுகினால் இது குறித்து அறிவிக்குமாறு வீரர்களுக்கும் முகாமையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயத்துடன் தொடர்புபட்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  தெரிவிக்கவில்லை.

எனினும் இவர்கள் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்புகளை தொடர்ந்து லீக் தொடரின் இயக்குநர் இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்தார் எனவும் அவர்கள் பொலிஸாரை அணுகினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலர் மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தொலைபேசியை  பயன்படுத்துவதை அவதானித்ததும் உடனடியாக இதனை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம், பொலிஸார் அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றினார்கள் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்தியர்களாகயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போட்டிகளில் வெளிநாட்டவர்கள் - குறிப்பாக தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் காணப்படும்போது சந்தேகம் ஏற்படுவது வழமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.