ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக இன்றும் செப்டம்பர் 7ஆம் திகதியும் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது.

இன்று  நண்பகல் 12.11 அளவில் களபூமி, கோண்டாவில் மற்றும் நாவற்காடு ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.