(இராஜதுரை ஹஷான்)

தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் எல்லை  நிர்ணய அறிக்கையினை தேல்வியடைய செய்தது. ஆககே பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவின் மீளாய்வு அறிக்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமாக அமையும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜத ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து அனைவரும்  குறிப்பாக    சிறுபான்மை கட்சிகள் புதிய தேர்தல் முறைமைக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். அரசாங்கமும் இவ்விடயத்திற்கு விரைவில் தீர்வினை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதன் பெறுபேறு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வெளிவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீ  லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஆகியன சூழ்நிலைக்கு   ஏற்றாற் போல் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டு  எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்து  பிரேரணையை தோல்வியடைய செய்து, கூட்டு எதிரணியின் முன்னிலையில் தலைகுனிந்தது.

இந் நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான மாற்று வழிமுறையினை கையாளும் விதமாக அரசாங்கம் பிரதமர் தலைமையிலான  குழுவினை நியமிக்க தீர்மானித்துள்ளது.  இக்குழுவின் பரிந்துரைகள் தேர்தலை  எவ்வாறு பிற்போட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதாகவே காணப்படுமே தவிர தேர்தலை விரைவுப்படுத்த எவ்வித முன்னேற்றகரமான தீர்மானங்களையும் மேற்கொள்ளாது.