கிறிஸ்தவ மதகுருமார்கள் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்த பிரச்சினைக்கு கிறிஸ்தவ திருச்சபை உரிய தீர்வை காண தவறியது குறித்து நான் வெட்கமடைகின்றேன் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்திற்கான விஜயத்தின் போது கிறிஸ்தவ மதகுருமார்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்களை சந்தித்த பின்னர் பரிசுத்த பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ மதகுருமார்களினால் அயர்லாந்தில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என பரிசுத்த பாப்பரசர் nதிரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களாக உள்ள ஆயர்களும் ஏனையவர்களும் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த குற்றங்களிற்கு உரிய தீர்வை காண முயலாதது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சமுதாயத்தை பொறுத்தவரை இது ஒரு வேதனைக்குரிய விடயமாக உள்ளது அவர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்துகொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்து இந்த தீமையை எப்பாடுபட்டேனும்  ஒழிப்பது என்பது குறித்து நான் பெரும் அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.