திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் பிரதேச வாசிகள் குடிநீர் வழங்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வறட்சி காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் இன்று மக்கள் குடிப்பற்கும் நீர் இல்லாத நிலையில் துன்பப்பட்டு நிற்கின்றனர். 

இதனடிப்படையில் இன்று திங்கட்கிழமை தாண்டியடி கிராம மக்கள் தமக்கு குடிப்பதற்காவது தண்ணீர் வழங்குமாறு கோரி சுலோக அட்டைகளை தாங்கியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது தாண்டியடி பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டதுடன் தாண்டியடி பிரதான வீதியில் நீர் குடங்களை கையில் ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

தாண்டியடி, சங்கமன்கிராம, உமிறி, நேருபுரம், தங்கவேலாயுதபுரம், காஞ்சிகுடியாறு காஞ்சிரம்குடா, மண்டானை சாகாமம்,குடிநிலம் மற்றும் மணல்சேனை போன்ற கிராமங்களில் வாழும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பாரிய அவல நிலைமைக்கு ஆளாகியுள்தாகவும், தற்போது காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக தங்களின் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை கொடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் தாம் துன்பப்படுவதாகவும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

தங்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு உனடியாக தங்களுக்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் மேற்கொள்ளுமாறு கோரிக்கை அடங்கிய மகஜரை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், திருக்கோவில் தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.