ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோருக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இரகசிய கைதுகளை தடுக்கவும் அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே இதற்கான நாள் ஒன்று உருவாக்கப்பட்டது. 

இதன் உருவாக்கத்தின் பின்னணியில் இலத்தீன் அமெரிக்க நாடான கொஸ்டரிக்கா உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலிந்து காணாமலாக்கப்படுதலை (forced disappearance) ஒரு அரசியல் அடக்கு முறையாக பாவித்த நாடுகளில் முதலிடத்தை இலத்தீன் அமெரிக்க நாடுகள் பெறுகின்றன.

இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் இரகசிய கைதுகள் , முகாம்களில் அடைத்து வைத்தல்,சித்திரவதைகள் போன்றவற்றிற்கு காரணமாக ஜேர்மனியின் நாசி படைகள் இருந்ததை உலகம் அறியும். அதே போன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளான கொஸ்டரிக்கா , வெனிசுவேலா, பெரு, ஆர்ஜன்டீனா, உருகுவே, சிலி, பிரேஸில் ஆகிய நாடுகளில் 1980 களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தன. 

இதை தடுப்பதற்கு கொஸ்டரிக்காவில் இயங்கி வந்த FEDEFAM என்ற அரச சார்பற்ற அமைப்பு முதன் முதலாக குரல் கொடுத்திருந்தது. பின்னர் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகிய தமது கவனத்தை திருப்பியிருந்தன. எனினும் இன்று உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போனோரின் தொகை அதிகரித்து வருகிறது. 

இதன் பின்னணியில் கூடுதலாக அரசியல் காரணங்களே விளங்குகின்றன. எனினும் எந்த அரசாங்கமும் அதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதோடு காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை அவர்களின் உறவினர்களுக்கு தெரியபடுத்துவதிலும் அக்கறை காட்டுவதில் பின்னிற்கின்றன அல்லது அது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் இழுத்தடிப்பகளை செய்து வருகின்றன. 

இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.காணாமல் போனோருக்கான அலுவலகம் இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக இறுதி யுத்த காலகட்டத்தில் இத்தொகை அதிகம். காணாமல் போனோரின் உறவினர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இவ்வருடம் பெப்ரவரி மாதம் காணாமல் போனோருக்கான அலுவலம் ஒன்றை ஸ்தாபித்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் ஆணைக்குழுவொன்றையும் நியமித்தது. 

எனினும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் அதே வேளை அரசாங்கத்திடமிருந்து அதற்கு உரிய ஆதரவு கிடைக்கின்றதா என்ற கேள்வி காணாமல் போனோரின் உறவினர்களிடம் உள்ளது. தீவின் பல பகுதிகளுக்கும் சென்று காணாமல் போனோரிடம் முறைப்பாடுகளை பெற்று வரும் ஆணைக்குழு காணமால் போனோரில் பொது மக்கள் மட்டுமல்ல இராணுவத்தினரும் பொலிஸாரும் அடங்குகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 

பல்வேறு அரச சார்பற்ற சர்வதேச அமைப்புகளின் புள்ளி விபரங்களை மறுக்கும் ஆணைக்குழுவானது இது வரை காணாமல் போனோரின் தொகையை சரியாக கூறமுடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதே வேளை சில இடங்களில் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் காணாமல் போனோரின் உறவினர்கள் முரண்படுவதையும் தடுக்க முடியாதுள்ளது.

உத்தேச தொகை 20 ஆயிரம் 1983 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு கிழக்குப்பகுதிகளில் காணாமல் போனோரின் தொகை 21 ஆயிரமாக இருக்கும் என காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே இருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே அவர் இத்தொகையை கூறியுள்ளார். தற்போது பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள் முறைப்பாடுகளின் அடிப்படையில் இத்தொகையில் வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார். இதே வேளை இதற்கு முன்னர் காணாமல் போனோர் பற்றி பல அமைப்புகள் வெளியிட்டுள்ள எண்ணிக்கைகள் பற்றி சரியான முடிவுகளுக்கு வரமுடியாதிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தரவுகளின் படி காணாமல் போனோரின் தொகை 16 ஆயிரமாக இருக்கும் அதே வேளை இதில் 5100 பேர் இராணுவம் மற்றும் பொலிஸார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகளின் படி இத்தொகை 21 ஆயிரமாக உள்ளது. மட்டுமன்றி அரசாங்க தகவல்களின் படி இத்தொகை 13 ஆயிரமாக உள்ளது. இத்தொகையானது கிராம அதிகாரிகளின் மூலம் சேகரிக்கப்பட்டதாகும்.காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஓர் இடைக்கால உத்தேச அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காகவே இந்த எண்ணிக்கைகள் ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச காணாமல் போனோர் தினமான இம்மாதம் 30 ஆம் திகதி இந்த இடைக்கால அறிக்கையை ஆணைக்குழுவானது ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில் சமர்பிக்கவுள்ளது. அலுவலகம் அனைவருக்குமானது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகமானது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் உரித்துடையது ஆகவே அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இதன் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தமை முக்கியமானது. 

அதாவது யுத்தகாலப்பகுதியில் இருதரப்பிலும் காணாமல் போயிருந்தனர் என்ற விடயம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எனினும் யுத்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே காணாமல் போன மக்கள் தொகையே அதிகமாக பதிவாகியுள்ளது. அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய வருவோர் தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே அதிக அக்கறை காட்டுகின்றனர். இதன் காரணமாகவே பலர் இறப்புச் சான்றிதலை பெறுவதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

வடக்கு கிழக்கு மட்டுமன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு சிலரின் தகவல்கள் இது வரை தெரியாதிருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் சொத்து விவகாரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான சட்ட ரீதியான நகர்வுகளுக்காக ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே பல உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்றிருக்கின்றனர் என்பது வேதனையான விடயம். குறிப்பாக கணவனை இழந்த மனைவிமார், பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள், சகோதரர்கள் இவ்வாறு இறப்பு சான்றிதழைப் பெற்றிருக்கின்றனர். முறைப்பாடு செய்து சுமார் 15 வருடங்கள் கழிந்த நிலையில் பலர் இந்த சான்றிதழைப்பெற்றுள்ளனர் என்பது முக்கிய விடயம்.இது வரை இவ்வாறு 500 சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அலுவலகம் கூறுகிறது. அச்சமூட்டும் மனித எச்சங்கள் யுத்த காலப்பகுதியில் சந்தேகத்தின் பேரிலேயோ அல்லது விடுதலை புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலரின் தகவல்கள் இன்னும் வெளிவராமலிருக்கும் நிலையில் இவர்கள் வெவ்வெறு இடங்களுக்கு கொண்டு சென்று கொல்லப்பட்டு பு.தைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இன்னும் அவர்களின் உறவினர்களுக்கு உள்ளது.

கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் குடா நாட்டின் பல பிரதேசங்களுக்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்களையும் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு முகாம்களின் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் விபர ஆவணங்கள் குறித்த கோவைகளை காணாமல் போனோருக்கான அலுவலகம் இன்னும் கோரவில்லை. அதாவது முறைப்பாடுகளை ஆணைக்குழு பெற்று வருகின்றதே ஒழிய இன்னும் விசாரணை பொறிமுறை குறித்து அது ஒன்றும் கூறவில்லை. 

இந்நிலையில் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப்புதைகுழியானது காணமால் போனோரின் உறவினர்களிடயே பதற்றத்தையம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளமை என்னவோ உண்மை. இதன் காரணமாக அவ்விவகாரத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகம் தலையிட்டிருக்கின்றது. ஏனெனில் மன்னார் மனித புதை குழி கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஒரு சந்தர்பத்தில் அப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. 

தற்போது அதன் அகழ்வுப்பணிகளுக்கு அலுவலகம் நிதி உதவி செய்துள்ளமை முக்கிய விடயம். இதன் அடிப்படையில் அகழ்வுப்பணிகள் முடிவடைந்தவுடன் எச்சங்களை ஆய்வுக்குட்படுத்தி அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என சாலிய பீரிஸ் கூறுகிறார். இது தொடர்பாக ஆணைக்குழு சார்பாக சட்டத்தரணி ஒருவரை நியமித்து தகவல்களை பெறும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் காணாமல் போனோர் இலங்கையில்? இது வரை கிடைத்துள்ள எண்ணிக்கைளை அடிப்படையாக வைத்துப்பார்க்கும் போது உலகில் அதிகம் காணாமல் போனோர் பதிவான நாடாக இலங்கை உள்ளதை கவனத்திற்கொள்ள வேண்டும்.ஏனெனில் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 12 இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் காணாமல் போனோர் தொகை குறிப்பிட்ட காலப்பகுதியில் 90 ஆயிரமாக இருக்கும் போது இலங்கை போன்ற சிறிய தீவில் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாகும். யுத்த காலத்து மக்கள் குடித்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை பற்றி ஆராய்தல் அவசியம். 

மேலும் மன்னார் மனித புதைக்குழி போன்று இன்னும் எத்தனையோ வெளிப்படாமலிருக்கும் இடங்கள் வடக்கு கிழக்குப்பகுதிகளில் இருக்கலாம். அவற்றை எவ்வாறு இனங்காண்பது மேலும் இது வரை கிடைத்திருக்கும் முறைப்பாடுகளுக்கு அமைய அடுத்தகட்ட விசாரணைகள. எவ்வாறு முன்னெடுப்பது என்பதிலேயே காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் வெற்றி தங்கியுள்ளது. மட்டுமன்றி இது வரையிலும் தமது உறவுகளைத் தேடி களைத்துப்போன மக்களுக்கு இந்த அலுவலகம் எவ்வாறான நம்பிக்கையை தரப்போகின்றது என்பதுவும் கேள்விக்குறியே.