(இராஜதுரை ஹஷான்)

எல்லை நிர்ணயம் என்ற பெயரில் மக்களின் பணத்தினையும், காலத்தினையும்  வீணடித்து  மாகாண சபை தேர்தலை  பிற்போட கபட நாடகம் ஆடும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்பதா உடனடியாக பதவி விலக வேண்டுமென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை  புதிய தேர்தல் முறையின் பிரகாரம் நடத்துவதற்கான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட  ஒரு பிரேரணை அரசாங்கத்தினாலே  நிராகரிக்கப்பட்டமை பாராளுமன்ற வரலாற்றிலே முதன் முறையாக இடம் பிடித்துள்ளது.

அரசாங்கம் ஒரு போதும் மாகாண சபை தேர்தலை நடத்தாது . ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய  நிலைப்பாடாக காணப்படுகின்றது. தேர்தலை பிற்போடவே  அனத்து தரப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  சுயாதீனமாக இடம்பெற வேண்டிய  தேர்தலுக்கு மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவே தடையாக காணப்படுகின்றார்.

 எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் தேர்தலை பிற்போட இவரே வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இவர் கொண்டுவந்த அறிக்கைக்கு இவரே  ஆதரவாக வாக்களிக்கவில்லை.  

தேசிய நிதி மற்றும்  காலத்தை எவ்வாறு மோசடி செய்ய வேண்டும்  என்று அரசாங்கம் தற்போது புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளது. எவ்விடயத்திற்கும் பிரத்தியேக குழுக்களை ஸ்தாபித்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றது என்றார்.