ஊடகவியலாளர் உதயராசா சாளின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாணைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் உதயராசா சாளின் அவர்கள் கடந்த 22 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அழைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி ஆறுகால்மடம் பகுதியிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய திருவிழா அலங்காரத்தின் போது வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று தமிழர் தாயக வடிவத்தில் இருந்தமையை முகநூலிலும் வேறு ஊடகங்களிலும் பிரசுரித்தமைக்காகவே அவர் விசாணக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் ஆலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வை பிரசுரித்தமைக்காக சாளின் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளமை ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செய்பாடாகும்.

ராஜபக்ச அரசின் காலப்பகுதியில் இடம்பெற்றது போன்று நல்லாட்சி வேடமிட்டு ஆட்சியேறியுள்ள ரணில் மைத்திரி அரசும் தொடர்ந்தும் ஊடக அடக்குமுறையை மேற்கொண்டுவருகின்றது.  இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.