நாற்பது வயதைக் கடந்த பலரும் உயர் குருதி அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இவர்களில் பலர் தங்களின் குடும்ப வைத்தியர்கள் சொல்லும் அறிவுரையின் படி நடந்து கொண்டு இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் சிலர் வைத்திய இதழ் மற்றும் வைத்தியம் தொடர்பான இணையதளத்தில் வெளியாகும் செய்திகளையும், குறிப்புகளையும் வாசித்துவிட்டு இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இது தவறு என்று வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு மரபணு கோளாறு, உடற்பருமன், முறையற்ற உணவு முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், முதுமை, புகை, மது, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், தைரொய்ட் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளின் சமச்சீரற்ற தன்மை என பல காரணங்களால் உருவாகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றன. இதில் எந்தவொன்றில் சிறு பாதிப்பு ஏற்பட்டால் இரத்த அழுத்தத்தில் எதிரொலிக்கும்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு முறையான சிகிச்சையை எடுக்கவில்லை என்றால் மூளை, இதயம், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். அத்துடன் இத்தகைய உறுப்புகளில் எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாமல் பாதிப்பை உண்டாக்கும். அதனால் இரத்த அழுத்தத்திற்கு சரியான தருணத்தில் உரிய சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

இதனை தவிர்க்கவேண்டும் என்றால் அல்லது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உப்பு குறைவான உணவை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். நார்ச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுங்கள். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். தினமும் நடைபயிற்சி, யோகா தியானம் போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம். புகையையும், மதுவையும் முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.