(எம்.எப்.எம்.பஸீர்)

 சட்ட மா அதிபரின்  ஆலோசனை கிடைக்குமானால், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த  கரண்னாகொடவையும், தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவையும் கைது செய்ய சி.ஐ.டி. தயாராக இருப்பதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும்  காணாமல் ஆக்கியமை தொடர்பில், 

நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எனும் அடிப்படையில் இவர்கள் இருவர் குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சாட்சிகளை சேகரித்துள்ள நிலையிலேயே, 

அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் அவ்வாலோசனை கிடைக்குமாயின் அவர்கள் இருவரும் உடன் கைது செய்யப்படுவர் எனவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

 இதில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, இந்த கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்களை  அறிந்திருந்தமைக்கான சான்றுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது. 

அதன்படி அவரை இந்த சம்பவத்துக்கு 'மாற்றால் பொறுப்புக் கூறல்' எனும் அடிப்படையில் கைது செய்ய முடியுமா என சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும், அந்த ஆலோசனை கிடைத்ததும் வசந்த கரண்னாகொட தொடர்பில் தீர்மானம் எடுக்கபப்டும் எனவும்  சி.ஐ.டி. தெரிவிக்கின்றது.

 இந் நிலையில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிராதானியுமான அத்மிரால் ரவீந்ர விஜேகுணர்தன, இந்த கடத்தல் விவகாரத்தில் பிராத சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் குமார ஹெட்டி ஆரச்சி எனும் நேவி சம்பத்துக்கு அடைக்களம் கொடுத்தமை, 

நாட்டைவிட்டு தப்பிச் செல்ல உதவியமை, நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளில் அநீதியான் முறையில் தலையீடு செய்தமை தொடர்பில் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் கோட்டை நீதிவானிடம் தனியான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் விசாரணைகள் பிரதான கட்டத்தை அடைந்துள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தது. அதன்படி நேவி சம்பத் தப்பிச் செல்ல, கடற்படை தளப்பதிக்கு சொந்தமான கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, தற்போது மக்கள் வங்கிக் கணக்கொன்று சி.ஐ.டி.யினரால் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

 இந் நிலையில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தை கையாளும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டாரவிடம்  இந்த கைதிகள் குறித்து வினவப்பட்ட போது,

' முழு விசாரணைக் கோவையையும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். நாம் சான்றுகளையே அதில் பிரட்ர்ஹானமாக பார்க்கின்றோம். எமக்கு கரண்னாகொடவா வேறு யாரா என்பது முக்கியமல்ல. நபர்களை நாம் பார்க்க மாட்டோம். எவராக இருந்தாலும் இந்த சம்பவத்துக்கு நேரடியாக மறைமுகமாக தொடர்புபட்டிருப்பின் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.' என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­க­ப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த வெள்ளை வேன் கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபேசேகரவின் நேரடி  கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. 

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

 இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான சிறப்பு புலனயவுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி 

இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது, கொமான்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார,  நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப்  பிரிவின் பணிப்பாளராகவும், கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை புலனாய்வு வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ்  ஆகியோர் கைதாகி   பிணையில் உள்ளனர். 

இந் நிலையிலேயே குற்றப் புலனயவுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி  தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.