(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் பிரித்தாளப்பட்டுள்ளனர். 

ஆகவே எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்க முடியாது. வாக்காளர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப மாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. 

ஆகவே மாற்று முறைமையொன்று அவசியமாகும். ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பதவி விலகுவதற்கும் நான் தயங்க மாட்டேன். அநீதிகளுக்கு எதிராக தான் பலதடவை பதவி விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

எல்லை நிர்ணய அறிக்கையை விவாதத்திற்கு எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சபையில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டன. என்றாலும் எல்லை நிர்ணய அறிக்கை ஏற்கெனவே சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது தொடர்பில் விவாதம் நடத்துவதில் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை.

எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். இந்த அறிக்கையின் ஊடாக சிறுபான்மை இன கட்சிகளுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.

சிறுபான்மையினரை பிரித்தாளும் முயற்சியே இந்த முறைமையில் கையாளப்பட்டுள்ளது.

இந்த முறைமையில் பல்லின தொகுதி தொடர்பான சில ஏற்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியது. 

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, கம்பளை ஆகிய தொகுதிகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதுமாத்திரமின்றி அமைச்சர் கபீர் ஹாஷிமின் மாவனெல்ல தொகுதிக்கும் அதே நிலைமையாகும். எனவே பெரும் அநீதி ஏற்பட்டுள்ளது.

 ஆகவே இந்த விவகாரத்தில் அநீதி ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகுவதற்கும் நான் தயங்கமாட்டேன். ஏற்கெனவே பல அநீதிகளுக்கு எதிராக நான் பதவி விலகியுள்ளேன். எனக்கு பதவியொன்று பெரிதல்ல.

ஆகவே எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்க முடியாது. வாக்காளர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப மாகாண உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஆகவே இதற்கான மாற்று முறைமையொன்று அவசியமாகும் என்றார்.