எல்லங்கா குளக் கட்டமைப்பினால் ஒன்றுடனொன்று இணைந்த 2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆரம்பமும் வடமேல் கால்வாய் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு சுபவேளையில் பொல்பிட்டிகம கும்புகுலாவ குளத்தருகில் இடம்பெற்றது.  

2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் எல்லங்கா குளக் கட்டமைப்பு செயற்திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயழிலந்து காணப்படும் எல்லங்கா குளக்கட்டமைப்பினை மீண்டும் புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். 

இலங்கையின் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன தொழில்நுட்பமான எல்லங்கா கிராமிய குளக்கட்டமைப்பு முறை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் பற்றிய அமைப்பினால் உலகின் முக்கியமான விவசாய மரபுரிமையாக இனங் காணப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கே உரித்தான இந்த பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நாட்டின் விவசாயத்துறையையும் விவசாய பொருளாதாரத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்குடன் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

குறித்த செயற்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 300 குளங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், பொல்பிட்டிகம, கும்புகுலாவ குளத்தின் புனரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் ஊடாக இந்த செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  

1960ல் மகாவலி அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்பம் முதல் வடமேல் மாகாண விவசாயிகளினதும் அரசியல்வாதிகளினதும் கோரிக்கையாக காணப்பட்ட “மகாவலி நீர் வடமேல் மாகாணத்திற்கு” எனும் குறிக்கோளை யதார்த்தமாக்குவதற்கு ஜனாதிபதி வழிகாட்டலின் கீழ்  மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் மற்றுமொரு பலனாக 2016ஆம் ஆண்டு வயம்ப எல செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

வடமேல் மாகாண விவசாயிகள் பல வருடங்களாக சிறுபோகத்திற்கும் பெரும்போகத்திற்கும் தேவையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதுடன், சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தினால் பிரதேச மக்கள் முகம்கொடுத்து வரும் சிறுநீரக நோய் பிரச்சினைக்கும் இச்செயற்திட்டத்தினால் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

குறித்த செயற்திட்டம் முடிவடைந்ததன் பின்னர் 105,000 ஏக்கர் அடி மகாவலி நீர் வருடம் முழுவதும் குருணாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம, எஹெட்டுவெவ, கல்கமுவ, மகாவ மற்றும் அம்பான்பொல ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. 

குறித்த செயற்திட்டத்திற்காக 16,000 மில்லியன் ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளதுடன், 2024 ஆண்டளவில் இச்செயற்திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 12,500 ஹெக்டெயர் விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதுடன், இதன்மூலம் 13,500 விவசாய குடும்பங்களின் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இச்செயற்திட்டத்தினூடாக பல்வேறு விதத்தில் 40,000 குடும்பங்கள் பலனடையக்கூடியதாக இருக்கும்.

வடமேல் கால்வாய் செயற்திட்டத்தின் ஊடாக மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தின் கலேவெல, வேமெடில்ல மற்றும் தேவஹூவ ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் நீரை பாதுகாப்பதுடன், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் மீஒய, ஹக்வட்டுனாஒய, கலாஒய ஆகிய குளங்களை அண்மித்து இருக்கும் 315 சிறிய குளங்களும், 08 பிரதான குளங்களும் மகாவலி நீரால் பலனடைகிறது.

அதற்காக அமைக்கவிருக்கும் பிரதான கால்வாய் 92 கிலோ மீற்றர் நீளமுடையதுடன், லெனதொர தம்புலு ஒயவிலிருந்து திசை திருப்பப்படும் மகாவலி நீர் அங்கிருந்து வேமெடில்ல வரை செல்வதுடன், அதன்பின் மகா கித்துல மற்றும் மகாகிரிவுல நீர்த்தேக்கம் வரை பிரதான கால்வாய் ஊடாக நீர் கொண்டு செல்லப்படும் .

அதன் பின்னர் இரண்டு பிரதான கால்வாயிகளினூடாக மகாகிரிவுல நீர்த்தேக்கத்திலிருந்து எஹெட்டுவெவ பிரதேசத்தின் கதுருவெவ வரைக்கும் 21 கிலோ மீற்றர் ஊடாகவும் மகாகிதுல நீர்த்தேக்கத்திலிருந்து மெடியாவ மகாவெவ வரைக்கும் 20 கிலோ மீற்றர் ஊடாகவும் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதுமட்டுமன்றி மெடியாவ கால்வாயில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாப்பஹூவ கால்வாயினூடாக யாப்பஹூவ பிரதேசத்தின் 1000 ஹெக்டெயர் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ததன் பின்னர் அப்பிரதேசங்களில் இரு போகங்களும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அமைவதுடன், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.