ஈழ மணித்திருநாட்டின் வடபாலமைந்த யாழ் குடாநாட்டில் மானிப்பாய்க்கு அருகில் சங்குவேலி எனும் அழகிய சிற்றூர் அமைந்துள்ளது. 

பற்பல வழங்களும் அமைந்த இக் கிராமத்தில் வனப்புறு வயல் வெளிகளும் பனம் தோப்புக்களும் பயன்தரு விருட்சங்களும் மென்மேலும் அழகு சேர்க்கின்றன. அனேகமான கிராமங்கள் நகரமாக உருமாற்றம் பெற்று வருகின்ற இக்கால கட்டத்திலும் ஒரு கிராமத்திற்கேயான குணாதிசயங்களுடனும் பொலிவுடனும் சங்குவேலிக்கிராமம் வனப்புடன் காணப்படுகிறது.

இக்கிராமத்தின் மத்தியில் தனிப் பெரும் அடையாளமாக ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தை புடைசூழ ஏனைய ஆலயங்களான ஸ்ரீ ஞான வைரவர் காளியம்பாள் தேவஸ்தானம், கள்ளாவெட்டை வைரவர், கலட்டி ஞான வைரவர், முதலியம்மன் கோவில் தவிர ஒரு ஆரம்ப பாடசாலை – சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (சுப்ரமணிய வித்தியாசாலை), வாசிக சாலை, பலநோக்கு கூட்டுறவு சங்கம், பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, உபதபாலகம், அரைக்கும் ஆலை என்பன அமைந்து காணப்படுகின்றன.

ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார் கோவில் 1918 ஆம் ஆண்டு ஸ்ரீமான் காசிநாதர் வைத்திலிங்கத்தால் நிறுவப்பட்டு இன்று மக்களின் பேராதரவுடன் நூற்றாண்டு விழா காண்கின்றது.

ஆகம விதிப்படி அமைந்த இவ்வாலய சுற்றுப் பிரகாரங்களில் முருகன் சகிதம் வள்ளி தெய்வயானை, நடேசர் சமேத சிவகாமி அம்பாள், நவக்கிரக சன்நிதி வைரவர் சண்டேஸ்வரர் சன்நிதானங்கள் காணப்படுகின்றன. இவ்வாலமானது இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வெண்கருங்கல்லினால் அமைக்கப்பட்மை தனிச்சிறப்பாகும்.இக்கோவிலின் தலவிருட்சமாக வன்னிமரமும் தீர்த்தமாக சிந்து தீர்த்தமும் விளங்குகின்றது.

முன்னைய காலங்களில் கட்டுத்தேரில் விநாயகப்பெருமான் எழுந்தருளி பின்னர் 2005 ஆம் ஆண்டு புதிய சித்திரத்தேர் திரு. சி. பஞ்சாட்சரவேல் தலைமையில் ஊர் மக்களினால் நிறுவப்பட்டது. அண்மையில் 2013 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அலங்காரத் திருவிழாக காணப்பட்டு தற்போது வருடாந்த திருவிழா ஆவணி மாத பூரணை தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு அதற்கு முன்னைய ஒன்பது நாட்களும் மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தற்போது தீர்த்தோற்சவத்திற்கு அடுத்த நாள் சங்குவேலி இளைஞர் யுவதிகளால் பூங்காவனம் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது.

நூறு வருடங்களாக ஒரே பரம்பரை அந்தணர்களால் (பிரம்ம ஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் அவரது மகன் பிரம்ம ஸ்ரீ பாலசுப்பிரமணியக்குருக்கள் அவர் பேரன் மங்களேஸ்வர சர்மா ) ஆலய நித்திய பூஜைகள் செவ்வனே நடைபெற்று வருகின்றது. மேலும் காசிநாதர் வைத்திலிங்கம் பிள்ளை மகன் முதலியார் மார்க்கண்டு பரம்பரையினரால் இவ்வாலயம் கிரமமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

காலா காலமாக இக்கோவிலில் நித்திய நைமித்திய பூஜைகளும் முறையாக நடைபெற்று வருகிறது. மேலும் நூற்றாண்டு காலமாக தொண்டர் சபையொன்று நிறுவாமல் இளைஞர் யுவதிகளால் காலத்திற்கு காலம் தொண்டுகள் செய்யப்பட்டு உற்சவங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. 

இவ்வூரைச் சேர்ந்த மக்கள் ஆசிரியர்களாகவும் வைத்தியர்களாகவும் கணக்காளர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் பட்டதாரிகளாகவும் அரசாங்க அலுவலர்களாகவும் விவசாயிகளாகவும் ஸ்ரீ சிவஞான பிள்ளையாரின் அருள்பெற்று உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் சிறப்புடன் வாழ்கின்றனர்.

தற்போது நூற்றாணடு விழாவையொட்டி ஸ்ரீ சிவஞானப் பிள்ளையார் கோவில் தேர் கொட்டகையில் மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம் வரையப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவலாக வருவது இன்னொரு சிறப்பம்சமாகும். 

இவ் ஓவியத்தினை சங்குவேலியை சேர்ந்த முன்னால் ஓவியர் திரு. சோமுவின் பேரனான திரு. துரைராஜேஸ்வரன். ஐங்கரனினால் வரையப்பட்டுள்ளது.

இம்முறை பூங்காவன நிகழ்வு அன்றே ஆவணிச்சதற நாளாக விளங்குவதால் நூற்றாண்டு விழாவும் 27. 08.2018 ஆம் நாளன்று நிகழவிருப்பது சிறப்பம்சமாகும். இத்தருணத்தில் ஆலயத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் சிறார்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் சங்கீதக் கச்சேரிகளும் நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு வெளிநாடுகளில் வதியும் சங்குவேலியைச் சேர்ந்த பலரும் உள்ளுர் மக்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்கக்காத்திருக்கிறார்கள். சங்குவேலிப்பதியில் எழுந்தருளியிருக்கும் சிவஞான பெருமானை மனமார வணங்கி சகல சம்பத்துகளும் அநுபூதிகளும் அடைய அனைவரையும் அழைக்கின்றோம்.

செல்வி தாரணி இரத்தினவேல்