கலாநிதி பண்டித் அமரதேவ சிறந்த கலைஞர் மட்டுமன்றி சிறந்த கல்விமானாகவும் அறிஞராகவும் விளங்கிய மனிதாபிமானமிக்க சிறந்ததோர் யுகப்புருஷர் ஆவார் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.இலங்கையின் அபிமானத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல அவர் ஆற்றிய ஈடிணையில்லாபணிக்காக அன்றும் இன்றும் என்றும் தேசத்தின் நன்மதிப்பு அவரை சென்றடைய வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நம் நாட்டின் ஈடிணையில்லா யுகப்புருஷராகிய காலஞ்சென்ற பண்டித் அமரதேவ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நிர்மாணிக்கப்படும் அமரதேவ கலை மற்றும் ஆய்வு மையத்திற்கான சட்ட வரைவின் இரண்டாம்முறை வாசிப்பு இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட இந்திய பாரம்பரிய சங்கீதத்தை தேசிய வரையறைக்குள் உள்ளடக்கி இலங்கை கிராமிய இசையையும் இணைத்து தேசிய அடையாளத்துடன் கூடிய இசை சம்பிரதாயத்தை உருவாக்க முன்னோடியாக செயற்பட்ட கலாநிதி பண்டித் அமரதேவ அவர்களால் கட்டமைக்கப்பட்ட சங்கீத பயிற்சிகள் மற்றும் படைப்புகளை தேசிய மரவுரிமையாக கருதி அவற்றை எதிர்கால சந்ததிகளின் பயன்பாட்டுக்காக பாதுகாக்கும் நோக்கத்துடன் சங்கீதத்துடன் தொடர்புடைய சகல பிரிவுகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமரதேவ கலை மற்றும் ஆராய்ச்சி மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கலாநிதி பண்டித் அமரதேவ உயிரோடிருந்தபோது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க அன்னாரின் இறுதிச் சடங்கின்போது ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இந்நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது.

அமரதேவ கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்மாண பணிகளுக்காக 2017 ஆகஸ்ட் 28ஆம் திகதி ஜனாதிபதி   அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 250 மில்லியன் ரூபாய் செலவில் பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அமரதேவ கலை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்ட வரைவு கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் இரண்டாம் முறை வாசிப்பின்போது பாராளுமன்றத்தில் விசேட  பிரகடனமொன்றை வெளியிட்ட ஜனாதிபதி  சிறந்த கலைஞராகிய பண்டித் அமரதேவ அவர்களின் நோக்கை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான சகல அனுசரணைகளையும் அரசாங்கம் வழங்கும் என்று தெரிவித்தார்.

இனிய குரலால் இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை குளிர்வித்த பண்டித் அமரதேவ, இலங்கை கலைத்துறையை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் அபிமானத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கும் துணை நின்றவர் என தெரிவித்த ஜனாதிபதி , இசை துறையினர் உள்ளிட்ட இலங்கைவாழ் கலைஞர்களுக்கு அன்னாரின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.