சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் திரையுலக வாழ்வில் 50 ஆண்டுகால சேவை பாராட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

ஈடிணையற்ற கதாபாத்திரங்களையும் படைப்புக்களையும் உயிரோட்டத்துடன் திரையொளியில் காண்பிக்கும் திரைக்காவியங்களில் தனது அற்புத நடிப்பினை வெளிக்காட்டியதுடன், 

தனக்கே உரித்தான ஒரு நடிப்புப்பாணியை கலைத்துறையில் உருவாக்கிக் கொண்டு சிங்கள திரைப்படத் துறைக்கு அரும் பணியாற்றிய பிரபல சினிமா நடிகையான கலாநிதி மாலினி பொன்சேகாவின் ஐம்பதாண்டு கால கலை சேவையை பாராட்டும் முகமாக கலாநிதி மாலினி பொன்சேகா மன்றத்தினால் இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

பொன் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மாலினி பொன்சேகாவுக்கு விசேட பரிசிலும் நிதி அன்பளிப்பும் வழங்கினார். 

பிரபல இந்திய திரைப்பட விமர்சகர் சோமா செட்டர்ஜி அம்மையார் இதன்போது நினைவுரை ஆற்றியதுடன், பிரபல திரைப்பட இயக்குநர் அசோக்க ஹந்தகம சிறப்புரை ஆற்றினார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அர்ஜூன ரணதுங்க, லசந்த அழகியவண்ண, பந்துல குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, அசேல இத்தவெவ, புத்திஜீகள், கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.