(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்த நாட்டின் மக்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 சிங்கப்பூர் மாத்திரம் நலன்பெரும் இலங்கை சிங்கப்பூர் சுதந்திர உடன்படிக்கையின் பாதகத்தன்மைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் வாய் திறக்காது அரசாங்கதின் பக்கம் நிற்கின்றார்.

 அதையும் தாண்டி இலங்கைக்கே இந்த உடன்படிக்கை வேண்டும் எனவும் கூறுகின்றார். இது மிகவும் மோசமானது என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்த நாட்டின் மக்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும் என நாம் கூறுகின்றோம். உள்நாட்டு உற்பத்திகள் அனைத்துமே பாதிக்கப்படும். 

இலங்கையில் இதுவரை  செய்துகொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் விடவும் மோசமானது இந்த சிங்கப்பூர் உடன்படிக்கை. 

இதில் பொருட்கள் மட்டும் அல்லாது சேவையும் சிங்கபூருக்கு வழங்கப்படுகின்றது. முதலீடு மற்றும் சேவை உடன்படிக்கையில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. 

சிங்கபூர் முதலீட்டாளர் இங்கு வந்து குப்பை மீள் சுழற்சி தொழிற்சாலைகளை அமைத்து குப்பைகளை இங்கு கொண்டுவந்து முகாமைத்துவப்படுத்தும்  நடவடிக்கை எடுக்கப்படும். 

இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அரசியல் அமைப்பையும் மீறி இந்த உடன்படிக்கையை அரசாங்கம் செய்துள்ளது. 

எனினும் அரசாங்கம் இதனை ஏற்றுகொள்ளக் தயாராக இல்லை. ஒருபுறம் வரி சுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள முடியாது உள்ளனர். மறுபுறம் இவ்வாறு நாட்டுக்கு ஏற்பில்லாத உடன்படிக்கைகளை செய்து நாட்டினையே பாதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது .

 இது குறித்து பிரதான எதிர்க்கட்சியோ எதிர்க்கட்சி தலைவரோ வாய் திறக்காமல் உள்ளார் . எதிர்க்கட்சி தலைவரும் அரசாங்கத்தின் சார்பாகவே கருத்துக் கூறுகின்றார். 

சிங்கபூர் மட்டுமே இலாபமடையும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார்.

 சிங்கபூர் உடன்படிக்கை இலங்கைக்கே முக்கியம் எனவும் அவர்  கூறுகின்றார். இது மிகவும் மோசமான கருத்தாகும். 

மேலும் இலங்கைக்கு குப்பை கொண்டுவரும் உடன்பாடுகளும்  சிங்கபூர் உடன்படிக்கையில் உள்ளது. அரசாங்கம் அதனை மறுக்கும் என்றால் அது குறித்த உடன்படிக்கையை வெளிபடுத்துங்கள்.