(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) 

வடக்கில் சிவில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ் மக்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சத் மத்தும பண்டார தெரிவித்தார். 

வடக்கில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. எனினும் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் அரசியல் சூழ்சிகள் உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா எம்.பி,  யாழ் குடாநாட்டில் ஏற்படும் சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? குள்ளமனிதர் போன்று சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். 

இது குறித்து என்ன செயற்பாடுகள் எடுக்கப்படுகின்றது? போதைப்பொருள் கடத்தல் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்துள்ளனவா? இதன் பின்னணியில் அரசியல் நடவடிக்கைகள் உள்ளதா ? நிலைமைகளை கட்டுபாட்டின் கீழ் கொண்டுவர முடியுமா என எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஆவா குழுக்கள் தொடர்புபட்டதாக  குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் அதனுடன் தொடர்புபட்ட 38 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்போதும் நீதிமன்ற விசாரணைகளை நடத்தப்பட்டு வருகின்றது. சந்தேக நபர்கள்  சிறையில் உள்ளனர் . 

இது குறித்து வழக்கு விரைவில் எடுக்கபட்டவுள்ளது. அதேபோல் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட நபர்கள் யார் என்பது குறித்து இன்னமும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அரசியல் வாதிகளின் பின்னணி உள்ளதா எனவும் இன்றும் தகவல் கிடைக்கவில்லை. இது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. 

அதேபோல் குள்ள மனிதர் குறித்து மக்கள் எந்தவொரு முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லை.ஆகவே  அது குறித்தும் எமக்குத் தெரியாது. 

எனினும் வடக்கில் குற்றங்களை  தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். அரசியல் வாதிகள், சிவில் உறுப்பினர்கள், இராணுவம் உள்ளிட்ட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

எனினும் மக்கள் மீதான எந்த அழுத்தமும் இல்லை. அவர்கள் சுதந்திரமாக செயற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம். மந்தமான நிலையில் வடக்கின் பாதுகாப்பு உள்ளது என்பதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. 

குற்றவாளிகளை கைதுசெய்துள்ளோம். நடவடிக்கைகளை முன்னெடுக்கபட்டு வருகின்றது ஆகவே எமது செயற்பாடுகள் சரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

வடக்கில் தமிழ் மக்களை கையாள தமிழ் தெரிந்த பொலிஸார் இல்லை,  தமிழ் மொழிமூல தேர்ச்சி பெற்ற  பொலிஸார் இல்லாமை ஒரு பிரச்சினையே. 15 வீதமான பொலிஸார் மட்டுமே தமிழ் பேசுகின்றனர். முடிந்த அளவில் தமிழ் மக்கள்  பொலிஸ் துறையில் இணைந்துகொள்ள வேண்டும். 

தமிழர்களை இணைத்துக்கொண்டு வடக்கில் சிவில் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் தயாராகவே உள்ளோம். ஆகவே தமிழ் அரசியல்வாதிகள் இந்த செய்தியை வடக்கில் தமிழ் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். 

வெற்றிடம் உள்ளது அதற்கு தமிழ் பொலிஸார் இணைந்துகொள்ளப்படுவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.