சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த  இலங்கையைச் சேர்ந்த நான்கு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட நான்கு பெண்களும் சிங்கப்பூரிலிருந்து மும்பை வழியாக இலங்கை வந்தபோதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பெண்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தபோது, பூர்த்தி செய்யப்படாத தங்க ஆபரணங்களை அணிந்து தாம்  அணிந்திருந்த ஆடைகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர். 

நான்கு பெண்களும் பிலியந்தல,பத்தரமுல்ல, முல்லேரியா மற்றும் பம்பலபிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 61, 67, 53 மற்றும் 46 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் ஒரு கிலோ மற்றும் 595 கிராம் நிறையுடையவையென தெரிவிக்கும் அதிகாரிகள் அவற்றின் பெறுமதி சுமார் 95 இலட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபா எனவும் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.