பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவயேற்பு வைபவத்துக்கு இஸ்லாமாபாத் சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து அந்நாட்டு இராணுவத்தளபதியைக் கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்ததையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தலைவருக்கு அருகே அமர்ந்திருந்ததையும் மையப்படுத்தி கிளப்பப்பட்டிருக்கும் அர்த்தமற்ற சர்ச்சைக்கு மத்தியில், புதுடில்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பரிமாற்றங்கள் நடந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஈ - இன்சாப் கட்சி பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய தனிக்கட்சியாக வெற்றிபெற்றதையடுத்து இம்ரான் கான் முதலில் வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டினார். 

இந்தியாவினால் எடுத்துவைக்கப்படக்கூடிய ஒவ்வொரு அடிக்கும் பாகிஸ்தான் இரண்டு அடிகளை எடுத்துவைக்கும் என்று நம்பிக்கை உணர்வுடன் அவர் கூறியிருந்தார். அவரின் அந்த நல்லெண்ண சமிக்ஞைக்கான தனது பிரதிபலிப்பை இந்திய பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வெளிப்படுத்தினார்." சமாதானம் மற்றும் அபிவிருத்தி " தொடர்பில் தங்களுக்கு இருக்கும் நோக்குகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டார்கள்.

அடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் புதிய பிரதமர் கானைச் சந்தித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களினால் கையெழுத்திடப்பட்ட துடுப்பு மட்டை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இரு நாடுகளுகளினதும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான இம்ரான் கானின் நிகழ்ச்சித் திட்டத்தில் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படவிருக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அவரால் நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர் கூறினார். கடந்தவாரம் பாகிஸ்தானின் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையிலான தூதுக்குழுவொன்று புதுடில்லி வந்து முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டது.

இம்ரான் கானை வாழ்த்தி மோடியிடமிருந்து கடந்த ஞாயிறன்று கடிதம் ஒன்று  கிடைக்கப்பெற்றதாகவும் அதில் இரு நாடுகளும் " ஆக்கபூர்வமான ஊடாட்டங்களைச் " செய்வதில் நாட்டம்காட்டவேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறேஷி கூறியிருந்தார். உபகண்டத்தில் மக்களை முன்னேற்றுவதற்கு சிறந்த மார்க்கம் பேச்சுவார்த்தைகளின் ஊடாக வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வதும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுமே என்று செவ்வாய்க்கிழமை இம்ரான் கான் டுவிட்டரில் பதிவொன்றைச் செய்திருந்தார். இந்தச் சமிக்ஞைகள் எல்லாம் வெறுப்புணர்ச்சியுடனான உறவுப் பின்புலத்திலும் கூட இரு பிரதமர்களும் இராஜதந்திரப் பண்பு நயத்தை இறுகப்பின்பற்றி நடந்துகொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

நன்கு தெரிந்தெடுத்த சொற்களின் பிரயோகங்கள் மாத்திரம் போதுமானதல்ல. புதுடில்லியிலும் இஸ்லாமாபாத்திலும் எந்த வட்டாரத்திலுமே நம்பிக்கை என்பது பெரும்பாலும் அறவே இல்லாத நிலையே இருந்துவந்திருக்கிறது.பெருமளவுக்கு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கமுடியாதவாறு தடுக்கக்கூடிய அரசியல்  யதார்த்தங்களுக்கு இரு தலைவர்களும் முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது. 2015 டிசம்பரில் லாகூருக்கு மேற்கொண்ட விஜயத்துக்குப் பிறகு ஒரு சில நாட்களில் பதனகோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதலைக் கையாளவேண்டியிருந்த மோடியைப் பொறுத்தவரை , லோக்சபா தேர்தல்களை இன்னமும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்திற்குள் சந்திக்கவேண்டியிருக்கும் நிலையில், அத்தகைய சமிக்ஞைகளைத் தவிர்க்கவே விரும்பக்கூடும். பாராளுமன்றத்தில் சொற்ப பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைத்திருக்கும் பிரதமர் இம்ரான் கானைப் பொறுத்தவரை, பழைய சிந்தனையுடனேயே இருக்க விரும்பக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் அக்கறை காட்டிய முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்களை அவர் கடுமையாகக் கண்டனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இருந்தாலும் கூட எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது.

முதலில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அவசரமாக கவனம் செலுத்தப்படவேண்டும். யுத்தநிறுத்தம் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும். இரு நாடுகளும் முன்னோக்கி நகர்வதற்கு இது முக்கியமானதாக அமையும். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற சர்வதேச நிதித்துறை நடவடிக்கைச் செயலணியின் கோரிக்கைக்கு இணங்குவதன் மூலமாக இம்ரான் கான் பொருளாதார முனையில் நெருக்குதல்களைத் தணித்து சிறிது மூச்சு விடக்கூடியதாக இருக்கும் என்று நம்பலாம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்கும் ஆதரவு தொடர்பில் இந்தியாவுக்கு இருக்கும் விசனத்தை தணிப்பதற்கு நேரடியாக கவனத்தைச் செலுத்துவதன் மூலமாக அவர் கூடுதலான அளவுக்கு நல்லெண்ணத்தைச் சம்பாதிக்கக்கூடியதாக இருக்கும். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறல்களைச் செய்யத் தூண்டுபவர்கள் தொடர்பிலும் கான் கவனம் செலுத்தினால் நல்ல சூழ்நிலை தோன்றும்.

இஸ்லாமாபாத்தில் நடத்தப்படவேண்டியதாக இருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் ( சார்க் ) உச்சிமாநாடு நீண்டகாலமாக தாமதிக்கப்படுகிறது. இவ்வருடம் அந்த மகாநாடு நடைபெறுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்க மோடி உதவவேண்டும். கடந்த ஒரு மாதமாக மோடியும் கானும் பேசிவந்திருக்கும் இலக்குகள் அடையப்படவேண்டுமானால் திரைக்குப் பின்னால் பெருமளவு கருமங்களைச் செய்யவேண்டியிருக்கிறது.

(வீரகேசரி இணையத்தள வெளியுலக ஆய்வுத்தளம் )