கூட்டமைப்பில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்னேரே முதலமைச்சர் வெளியேறிவிட்டார் அவர் கூட்டமைப்பு சபை பதவியில் இருப்பதற்கு  தகுதியற்றவர் என ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையிலிருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே முதலமைச்சர் வெளியேறிவிட்டார்.

கூட்டமைப்பினுடைய மாகாண சபை  அறுதிப்பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்படுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொன்னால் அவர்கள் கூட்டமைப்பினுடைய சபையிலே இருப்பது என்பதும், பதவி வகிப்பது என்பதும் அநாகரிகமானது என முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது தாயகம் அலுவலகத்தில் நேற்று மாலை விளையாட்டுக்கழகங்களுக்கான உதவித் திட்டத்தை வழங்கி வைத்த பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 38 உறுப்பினர்களில் முதலமைச்சர் உட்பட 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள்.  ஆகவே முதலமைச்சர் அவர்கள் புதிதாக ஒரு அணியாக செயற்படுவதாக இருந்தால் அவர் எந்த அணிக்கு போகப் போகிறார் என்பது எல்லாம் எமக்கு தெரியாத விடயம்.

அவர் கூட்டமைப்பிலிருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகவும் அல்லது கூட்டமைப்புடன் ஒத்து இயங்குகின்ற தன்மையிலிருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முதலே அவர் வெளியேறிவிட்டார். தனக்கு என ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு அந்த வட்டத்தின் ஆலோசனைகளுடன் தான் செயற்பட்டு அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலமை தான் உள்ளதாக நான் கருதுகிறேன்.

கூட்டமைப்பினுடைய மாகாண சபை  அறுதிப்பெரும்பான்மையுடன் செயற்படுகின்ற இந்த சபையிலே தாங்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டு அல்லது தாங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து செயற்படுவதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அந்த பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள் கூட்டமைப்பு இல்லை என்று சொன்னால் அவர்கள் கூட்டமைப்பினுடைய சபையிலே இருப்பது என்பதும், பதவி வகிப்பது என்பதும் அநாகரிகமானது என்று கருதுகிறேன். 

முதலமைச்சர் மாத்திரமல்ல, மாகாண சபை உறுப்பினர்களான திருவாளர் ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்றோர் தாங்கள் எந்தக் கட்சியும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் தேர்தலில் எந்தக் கட்சியும் இல்லாமல் அவர்கள் வாக்குக் கேட்டு மாகாண சபைக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வந்தவர்கள்.

அதற்கு ஒரு படி மேலே சென்று ஐக்கரநேசன் சொன்னதாக ஒரு பத்திரிகைச் செய்தியை பார்த்தேன். கூட்டமைப்பு என்பது ஒரு கூழ் முட்டை என்றும் அதற்கு அடைகாக்க முடியாது. அடைகாப்பது பிரயோசனமற்றது என்றும் தெரிவித்துள்ளதாக பார்த்தேன். அப்படியென்றால் அவரும் கூழ் முட்டை தான். கூழ் முட்டைக்குள் தான் அவரும் இருக்கிறார். கூட்டமைப்பினுடைய அங்கத்தவராக தான் இன்றும் பதவியில் இருக்கிறார். நான் இன்று சொல்வதைக் கேட்டு சிலவேளை மாகாண சபை பதவியை அவர் தூக்கியெறியலாம். ஏனென்றால் மாகாணசபை நிறைவு பெறுவதற்கு இன்னும் குறிப்பிட்ட சில நாட்கள் தான் இருக்கிறது. 

ஆகவே, வாக்குப் போட்ட மக்களுக்கு விசுவாசமாக எல்லா இடத்திலும் சரி பிழை வரும். அந்த சரிபிழைகளை திருத்திக் கொண்டு இந்த மாகாணசபை திறம்பட நடத்தி மக்களுக்குரிய சேவையை வழங்கியிருக்க வேண்டும். சில அமைச்சுக்கள், சில திணைக்களங்கள் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியிருக்கிறது.

ஆனால் இந்த மாகாண சபை திறம்பட செயற்படாமைக்கு அந்த மாகாண சபையினுடைய வழிகாட்டியாக இருக்கின்ற முதலமைச்சர் அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  முதலமைச்சர் தான் மாகாணசபையை கொண்டு நடத்துபவர்.

ஆகவே இந்த மாகாண சபையில் நாங்கள் பிழை விட்டிருந்தால், அந்த பிழைகளை ஏற்றுக் கொண்டு நாங்கள் முன்னுக்கு போவதை பார்க்க வேண்டுமேயொழிய, அதைவிடுத்து 2009 ஆம் ஆண்டு நாங்கள் ஆயுத பலத்தை இழந்து அகிம்சைப் பலத்தில் செயற்பட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளுக்குள் அரசியலுக்காக நாங்கள் பிரிந்து ஒருவர் மேல் ஒருவர் தூற்றி தமிழர்கள் ஒன்றாக இல்லை என்பதை காட்டுவோமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களை புதைகுழியில் தள்ளுவதாக அமையும்.

ஆகவே, முதலமைச்சர் ஒரு புதிய அணியை உருவாக்குவதாக இருந்தால் அவர் யாருடன்  புதிய அணியை உருவாக்கப் போகின்றார் என்ற வதத்திகள் இருக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் சேரப்போவதாக சொல்கிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் சேர்ந்தால் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் முன்னர் ஆயுதக்குழுக்களாக இருந்து தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள புளொட், ரெலோ போன்ற கட்சிகளை உள்வாங்க கஜேந்திரகுமார் அவர்கள் விரும்பமாட்டார் என்ற செய்தியை பத்திரிகைகளில் காணக் கூடியதாக இருந்தது.

ஆகவே அந்த புதிய கூட்டு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அல்லது தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு குழுவாக இயங்குவதற்கு அவர்கள் முயற்சிகள் எடுப்பதாக நாங்கள் அறிகிறோம். அப்படியானதொரு புதிய அணியின் ஊடாக முதலமைச்சர் வந்தாலும் மக்கள் அதற்குரிய தீர்ப்பை வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன்.

நாங்கள் எல்லோரும் குறித்த அரசியலுக்கு வந்தமைக்குரிய காரணம், 30 வருட யுத்தத்தில் சின்னாபின்னமாக இருக்கின்ற எங்களது தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே. அந்த எண்ணத்தை எவ்வளவு தூரம் மனதில் வைத்துக் கொண்டு எமது அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.

 முதலமைச்சர் ஆரம்பத்தில் தான் இரண்டு வருடம் தான் இருப்பேன். அதற்கு பின்னர்  மாவை ஐய்யா இருக்கட்டும் என்று கூறியிருந்தார். தற்போது ஐந்து வருடம் கழித்தும் தான் திருப்பவும் வரத்தான் போகிறேன்.

கூட்டமைப்பினுடைய முதலமைச்சரா அல்லது கூட்டமைப்பு இல்லாத முதலமைச்சாரா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிடம் இருப்பதாக கூறியதாக அண்மையில் பத்திரிகைளில் பார்த்தேன். கூட்டமைப்புக்கால் வந்தாலும், யாருக்கால் வந்தாலும் அவர் முதலமைச்சராக இருக்க விரும்புவதையே வெளிப்படுத்தியுள்ளார். 

என்னுடைய கேள்வி என்னவென்றால், இவர் திரும்பவும் முதலமைச்சராக வருவதற்குரிய காரணம் என்ன...?, என்ன வேலையை செய்து குறையில் விட்டுவிட்டு அதை முடிப்பதற்கு திரும்ப வருகிறீர்கள்...?,  உங்களுடைய மாகாணசபையிலேயே செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகள், ஏனைய வேலைகள், அரசியல் வேலைகள் என்பவற்றில் என்ன என்ன வேலைகளை நீங்கள் செய்தீர்கள்.

என்ன வேலை முடித்திருக்கிறீர்கள். என்னத்தை செய்வதற்கு முதலமைச்சருக்கு 5 வருடம் தேவையாக இருக்கிறது...? என்பதை முதலமைச்சர் வெளிப்படுத்துவாராக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளத்தக்க வேலைத்திட்டங்களாக இருந்தால் அவருக்கு பின்னால் நிற்பதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அதற்கு மாறாக கடந்த 5 வருடங்களிலே எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத பல விடயங்களை குழப்பியடித்த நிலை இருக்கும் போது திருப்பவும் முதலமைச்சராக இருக்க 5 வருடம் கேட்பது என்ன நியாயத்தில், என்ன அடிப்படையில் என்பது புரியவில்லை. 

நாங்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் பதவிக்கு வந்தால் 30 வருட யுத்தத்தால் துன்பப்பட்ட மக்களது துன்பத்தை போக்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்படி எம்மால் முன்னெடுக்கப்படாவிட்டால், அந்த திறன் எம்மிடம் இல்லை என்றால் அல்லது திறன் இருந்தும் பலர் எம்மை தடுக்கிறார்கள் என்றால் நாம் இதிலிருந்து ஒதுங்கி போவது தான் நல்ல விடயம்.

செய்யக் கூடியவர்கள் வந்து செய்வார்கள். அதை விடுத்து வெறும் பதவிக்காகவும், காழ்புணர்ச்சிக்காகவும், அரசியல் போட்டிக்காகவும் மீண்டும் மீண்டும் வந்து இன்னுமொரு 5 வருடத்தை வீணாக்கி இந்த மக்களுக்களின் வாயில் மண் அள்ளிப் போடுவதாக தான் அமையும் எனத் தெரிவித்தார்.