(இராஜதுரை ஹஷான்)

"சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக  இலங்கை குப்பைகளை கொட்டும் நாடாக மாற்றப்படும் என்று எதிர்தரப்பினர் குற்றம் சுமத்துவது  முற்றிலும் பொய்யான விடயமாகும் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு  பிரதமராக இருந்த வேளையில் பாக்கிஸ்தான் நாட்டுடன் இதுபோன்ற  ஒரு உடன்படிக்கையினை மேற்கொண்டார். அந்த உடன்படிக்கையும், தற்போதைய  சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணையாகவே காணப்படுகின்றது" என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"தமது அரசியல் பிரவேசத்தினை மீண்டும்  ஏற்படுத்திக் கொள்ள எதிர்தரப்பினர்   சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பகடை காயாக  பயன்படுத்திக் கொள்கின்றனர்.  அரசியல்  என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கருத்துக்களை குறிப்பிடாமல்.  தேறிய சிந்தனைகளுடன் செயற்பட வேண்டும்.

சிங்கப்பூர்  சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று எதிர்தரப்பினருக்கு அரசியல் தர்க்கம் பேசும் விடயமாக மாறிவிட்டது.  இவ்வொப்பந்தத்தில்  இருக்கும் ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்டி  மக்களை  போராட்டங்களுக்கு இணைத்துக் கொண்டு ஒப்பந்தத்தை  கைவிட அழுத்தங்களை  கொடுப்பது நாட்டின் எதிர்கால  பொருளாதார நலன்களுக்கு தடைவிதிப்பதாகவே காணப்படுகின்றது. 

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாட்டு பொது மக்கள்  முழுமையான தெளிவற்ற நிலையிலே காணப்படுகின்றனர். ஆனால் துறைசார் நிபுணர்கள் குறிப்பான  அரச வைத்திய சங்கத்தினரும் பொது எதிரணியினரது கருத்துக்களுக்கு ஆதரவு வழங்குவது கவலையளிப்பதாகவே காணப்படுகின்றது.

குறித்த சுதந்திர வரத்தக ஒப்பந்தத்தின் ஊடாக பிற நாடுகளில் உள்ள மனித பாவனை குப்பைகள்  இலங்கையில் கொட்டப்படும் என்று எதிர்வு கூறுகின்றனர்.  மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருக்கும் காலத்தில் பாக்கிஸ்தான் நாட்டுடன் இதுபோன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளார். ஆனால் அவ்வொப்பந்தத்தில் குறிப்பட்டுள்ளதை போன்று  எவ்வித.  மனித பாவனை குப்பைகளும்  இலங்கையில் கொட்டப்படவில்லை முறையாக முகாமைத்துவம்  இல்லாமையினால் இவ்வொப்பந்தம் சாத்தியமற்றதாகிவிட்டது. . இவ்வொப்பந்தத்தினை போன்றே  சிங்கப்பூர்  சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் நவீன உடன்படிக்கைகளை  செயற்படுத்த  வேண்டும். எதிர்காலத்தில்  ஆசியாவில் உள்ள  16 நாடுகள்  இதுபோன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டே பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையவுள்ளது.  இலங்கை  சுதந்திர வரத்தக ஒப்பந்தத்தை  நடைமுறைப்படுத்தாவிடின் ஆசியாவின் பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து தனிமைப்படுத்தப்படும். நாம் பிற நாடுகளின் பொருளாதார கொள்கைகளுடன்  ஒன்றினைந்து செயற்பட வேண்டுமாயின் இதுபோன்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை  செயற்படுத்த வேண்டும்.

சுதந்திர வரத்தக ஒப்பந்தம்  நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையில் உள்ளூர்வாசிகளின்   தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விடுவதோடு  சிங்கப்பூர் பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்புக்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடுகின்றனர். சிங்கப்பூர் நாட்டு பிரஜையின் தனிமனித வருமானம் எமது நாட்டு தனிமனித வருமானத்தை விட பன்மடங்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில்  சிங்கப்பூர் பிரஜை  எமது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வது சாத்தயமற்றது. இவ்வொப்பந்தத்தின் ஊடாக  சிங்கப்பூர் நாட்டில்  எமது நாட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களே  கிடைக்கப் பெறும்.

ஒரு நாடு பிறிதொரு நாட்டுடன் உடன்படிக்கையினை மேற்கொள்ளும் போது  சர்வதேச  வர்த்தக உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படும். இதில் எமது நாட்டுக்கு தேவையான விடயங்களையும், பயன்  பெறும் விடயங்களையும் மாத்திரமே தெரிவு செய்துக் கொள்ள வேண்டும் இவ்வாறே  சிங்கப்பூர் நாட்டுடனான  வர்த்தக ஒப்பந்தமும்   அமைச்சரவையின் அனுமதியுடனே  கைசாத்திடப்பட்டது. இதில் எவ்விதமான இரகசியங்களும் மறைக்கப்படவில்லை.

இவ்வொப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி விசாரனைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்துள்ளார்.  அரசியல் சார்பற்ற துறைசார் நிபுணர்களே  குறித்த குழுவினராக நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக  நாட்டுக்கு பாரிய நன்மைகளை ஈட்டித் தரும் ஒரு ஒப்பந்தத்திற்கு இடையூறாக செயற்படுவது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.  அரசாங்கம்  நிச்சயம் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும்" என்றார்.