(எம்.மனோசித்ரா)

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் காணப்படும் முரண்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு புதிய சம்பள ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவ் ஆணைக்குழுவில் உள்ளடங்கும் உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் தலைவராக எஸ்.ரானூக்கே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இவ் ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

கே.எல்.விஜயரத்ன, டி.பி.கொல்லூரே, சி.பி.ஸ்ரீவர்தன, சுதர்ம கருணாரத்ன, ஜானக சுகததாச, தாரணி.எஸ்.விஜேதிலக, லலித்.ஆர்.டி.சில்வா, ஜி.எஸ்.எதிரிசிங்க, ஏ.ஆர்.தேசப்பிரிய, பீ.பி.பி.எஸ்.அபேகுணவர்தன, வைத்தியர்.பாலித அபேகோன், பி.தங்கமயில், எஸ்.டீ.ஜயகொடி மற்றும் எம்.சி.விக்ரமசேகர ஆகியோரே அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ரயில் சேவை பணியாளர்கள் உள்ளிட்ட ஏனைய பொதுத் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய முரண்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.  முரண்பாடுகளை நீக்குவது பற்றி ஆராய்ந்து அதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் இவ் ஆணைக்குழுவின் பணியாகும். 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இவ்விடயம் தொடர்பில் சமர்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

சம்பள சுற்று நிரூபத்திற்கு ஏற்ப இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான பரிந்துரைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தால் இவ் ஆணைக்குழுவிற்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இவ்வாறு பொதுத் துறை மற்றும் ரயில் சேவையாளர்களின் சம்பள உயர்வில் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.