வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக வரட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்செய்கையாளருக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார். 

வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட நெற் செய்கையாளருக்கான உதவித் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக வரட்சியால் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளருக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2016 - 2017 பெரும்போகம், 2017 சிறுபோகம் மற்றும் 2017 - 2018 பெரும்போகம் என மூன்று காலப்பகுதிகளும் வரட்சி காரணமாக பாதிப்பை எதிர்நோக்கி நெற்பயிர்செய்கை நடவடிக்கையில் ஈடுபடாத விவசாயிகளுக்கே இந்த நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. 

இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 438 குடும்பங்களுக்கும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 38 குடும்பங்களுக்கும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 520 குடும்பங்களுக்கும் என 991 குடும்பங்களுக்கு குறித்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

 குறித்த நபர்களுக்கு முதல்கட்டமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 9.457 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த மாதங்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.