(இரோஷா வேலு) 

கொழும்பை அண்மித்த பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் போது ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் செப்டெம்பெர் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஜா-எல பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் ஜா- எல கருப்பு பாலம் அருகிலிருந்து 2 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயினுடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்டன் திசாநாயக்க என்பவர் கைதுசெய்யப்பட்டார். 

மினுவாங்கொடை கருப்பு பாலத்தின் அருகில் வைத்து 5 கிராம் 10 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கொட்டுடன் நிசன்சலா விஜேசுந்தர என்ற 25 வயதுடைய யுவதியொருவரும் பாலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். 

ஜா - எல அனுவன ரயில் கடவைக்கருகில் வைத்து 10 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பு 10ஐச் சேர்ந்த 40 வயதுடைய ஷிரோமி மல்காந்தி பெர்நாந்து என்ற பெண்ணும் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு பேலியகொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மூவரும் இன்று  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் நீதவான் அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் கொழும்பு கொம்பெனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகந்த வீதி 83 ஆவது ஒழுங்கையில் வைத்து வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் 25 கிராம் 150 மில்லிகிராம் ஹெரேயினுடன் வாகந்த கொழும்பு 2ஐச் சேர்ந்த 41 வயதுடைய விக்ரமசிங்க ஆராச்சிலாகே தொன் பியந்த என்பவர் கைதுசெய்யப்பட்டு, இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். 

அவற்றுடன், வாழைத்தோட்ட பொலிஸாரால் அப்துல் அஹமட் வீதி 95 ஆவது ஒழுங்கையில் வைத்து 3 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கொழும்பு 10ஐச் சேர்ந்த தானிமா ஷர்மிலா என்ற 23 வயதுடைய யுவதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.